
சிங்கப்பூர், அக்டோபர்-7 – போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக சிங்கப்பூரில் தூக்கிலிடப்படுவதிலிருந்து மலேசியர் பி.பன்னீர் செல்வத்தைக் காப்பாற்றும் கடைசி முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது.
அவரின் மரணதண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என, சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் சற்று முன்னர் திட்டவட்டமாக அறிவித்தது.
இதையடுத்து, சிறைச்சாலைத் துறை ஏற்கனவே அறிவித்தபடி, நாளை புதன் கிழமை அதிகாலை அவர் தூக்கிலிடப்படுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
இத்தகவலை ஃபேஸ்புக்கில் பகிரந்த பன்னீரின் முன்னாள் வழக்கறிஞர் ரவி, நீதி மற்றும் கருணையில் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் இது மிகவும் கனமான தருணம் என ஏமாற்றம் தெரிவித்தார்.
போதைப் பொருள் கடத்தல் கும்பல் தொடர்பில் மலேசியப் போலீஸாரின் விசாரணையில் பல முக்கியத் தகவல்களை பன்னீர் வழங்கியிருப்பதால், மரண தண்டனையை ஒத்தி வைக்க மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனித உரிமை அமைப்புகளும் சிங்கப்பூரை முன்னதாக வலியுறுத்தின.
நேற்று கூட கடைசி முயற்சியாக, அவரின் குடும்பம் சார்பில், தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்திடமிருந்து நல்ல செய்தி வருமென குடும்பத்தார் காத்திருந்த நிலையில், இதயத்தை நொறுங்கச் செய்யும் வகையில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.



