
கோலாலம்பூர், ஜனவரி-1 – இன்று ஜனவரி 1 முதல், நாட்டில் கண்ட கண்ட இடங்களில் குப்பை வீசும் குற்றத்திற்கு புதிய நடவடிக்கை அமுலாகியுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள், இனி 2,000 ரிங்கிட் அபராதத்தோடு, 12 மணி நேர சமூக சேவையாக பொது இடங்களை சுத்தம் செய்யவும் வேண்டும்.
இந்நடவடிக்கை, அவர்களை அவமானப்படுத்த அல்ல, மாறாக குடிமைப் பொறுப்பை உணரச் செய்வதற்காகவே என, திடக்கழிவு மற்றும் பொது சுத்திகரிப்பு மேலாண்மை கழகம் தெரிவித்துள்ளது.
மலேசியர்கள் மட்டுமல்ல, வெளிநாட்டவர்களுக்கும் இப்புதிய விதிமுறை பொருந்தும்.
பெரிய பெரிய நிகழ்வுகளுக்குப் பிறகு, புக்கிட் பிந்தாங் போன்ற கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் குப்பை வீச்சு அதிகரிப்பதை கட்டுப்படுத்த, தயவு தாட்சணியம் இன்றி கடுமையான நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படுமென அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர்.
இப்புதிய முறையால் சுத்தமான தெருக்களையும், பொது பராமரிப்பில் அதிக பொறுப்புணர்வையும் உருவாக்க மலேசியா விரும்புகிறது…



