கனடா, மெக்சிகோ, சீனா இறக்குமதிப் பொருட்களுக்கான வரியை உயர்த்திய டிரம்ப்

வாஷிங்டன், பிப்ரவரி-2,
அமெரிக்காவின் பெரிய வர்த்தகப் பங்காளிகளான கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய 3 நாடுகளுக்கும் அதிபர் டோனல்ட் டிரம்ப் வரி உயர்வை அறிவித்துள்ளார்.
அனைத்துலகப் பொருளாதார அவசர அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்தி, இந்த வரி உயர்வு உத்தரவு வெளியாகியுள்ளது.
அவ்வகையில் கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு இனி 25 விழுக்காடு வரி விதிக்கப்படும்.
எனினும் கனடாவின் எரிசக்தி வளத்திற்கு சற்று குறைவாக 10 விழுக்காடு லெவி கட்டணம் விதிக்கப்படும்.
ஏற்கனவே பல்வேறு வரிகள் விதிக்கப்படும் சீனப் பொருட்களுக்குக் கூடுதலாக 10 விடுக்காடு வரி விதிக்கப்படுகிறது.
போதைப்பொருள் மற்றும் குடிநுழைவுத் துறை தொடர்பான அசாதாரண அச்சுறுத்தல்களை முறியடிப்பதில், அம்மூன்று நாடுகளும் தோல்வி கண்டிருப்பதே இந்த வரி உயர்வுக்குக் காரணமென வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
கள்ளக்குடியேறிகள் மற்றும் அபாயகர போதைப்பொருளின் வரவு அமெரிக்காவை அச்சுறுத்துகிறது.
ஆக, மேற்கண்ட இரு விவகாரங்களையும் முறியடிப்போம் என கொடுத்த வாக்குறுதியை அம்மூன்று நாடுகள் நிறைவேற்ற வேண்டும் என்பதை நினைவுப்படுத்தவே, வரி உயர்வு அமுலுக்கு வருவதாக வெள்ளை மாளிகை மேலும் கூறியது.
இரண்டாவது முறையாக அதிபரானதிலிருந்து, ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கையை வலியுறுத்தி டிரம்ப் இது போன்ற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.