
கோலாலம்பூர், அக்டோபர்-6,
கோலாலாம்பூரில் உள்ள கம்போங் பாரு பகுதி Malay Reserve Land எனப்படும் மலாய் ஒதுக்கீட்டு நிலம் அல்ல, மாறாக மலாய் விவசாயக் குடியிருப்பே என, கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சலிஹா முஸ்தஃபா மக்களவையில் தெரிவித்துள்ளார்.
இது 1900-ஆம் ஆண்டு நிலச் சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டது.
உண்மையான மலாய் ரிசர்வ் நிலங்கள் 1974-ஆம் ஆண்டின் கூட்டரசு பிரதேச ஆணையின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன; அவை மலாய்க்காரர்களுக்கு மட்டுமே சொந்தமாகவோ அல்லது மாற்றப்படவோ முடியும் என்றார் அவர்.
2025 நிலவரப்படி, கோலாலம்பூரில் 1,004 ஹெக்டர் மலாய் ரிசர்வ் நிலங்கள் உள்ளன; அவை செகாம்புட், செலாயாங், சுங்கை பெஞ்சாலா, தாமான் டேசா மற்றும் கோம்பாக் பகுதிகளில் அமைந்துள்ளன.
பலரும் இணைந்து நிலங்களைப் பகிர்ந்துள்ளதால், உரிமை, மதிப்பீடு மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு போன்ற சிக்கல்கள் வளர்ச்சிக்கு தடையாக உள்ளதாக சாலிஹா கூறினார்.
உதாரணத்திற்கு, 8,700 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு நிலத்தின் இணை உரிமையாளர்களாக 256 பேர் வரை பதிவுச்செய்யப்பட்டு, அனைவருமே சொந்தம் கொண்டாடும் சூழ்நிலையை அவர் சுட்டிக் காட்டினார்.
இந்நிலையில், UDA Holdings போன்ற நிறுவனங்களுடன் இணைந்து கம்போங் பாரு மற்றும் காம்போங் சுங்கை பாரு பகுதிகளின் மறுவளர்ச்சியை நியாயமாகவும், மலாய் கலாச்சாரத்தை காக்கும் வகையிலும் அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக Dr சலிஹா கூறினார்.