
கோலாலம்பூர், ஆகஸ்ட்-26 – MyBurgerLab முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஆண்ட்ரூ சோங் (Andrew Chong), திரங்கானுவில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வராதவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்த கருத்து தெரிவித்த சில நாட்களிலேயே, சமூக வலைதளங்களில் கலகம் தூண்டும் பதிவுகள் காரணமாக நிந்தனைச் சட்டத்தில் கைதுச் செய்யப்பட்டார்.
சோங், @ChongKahtze எனும் X கணக்கின் உரிமையாளர் என்பதை, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம்.குமார் உறுதிப்படுத்தினார்.
2 நாட்களுக்கு அந்நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
@IFactoreal என்ற கணக்கின் உரிமையாளரான மற்றொரு சந்தேக நபர் 4 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்ள்ளார்.
சோங், மலேசியா தீவிரவாதிகளால் கைப்பற்றப்படலாம் என பதிவிட்ட வேளை, இன்னோர் ஆடவர் “இஸ்ரேல், பிரதமர் அன்வாரின் இல்லத்தையும் தாக்கட்டும்” எனக் குறிப்பிட்டதாக குமார் கூறினார்.
சோங் மீது 1948 தேச நிந்தனைச் சட்டம், குற்றவியல் சட்டம், தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை நடைபெறுகிறது.
இன்னொரு சந்தேக நபர் மீது குற்றவியல் மிரட்டல் குற்றச்சாட்டுகளும் உள்ளன.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், இருவருக்கும் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.
சமூகத்தில் கலக்கம் உண்டாக்கும் பதிவுகள் இடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டத்தோ குமார் மீண்டும் எச்சரித்தார்.