ஷா அலாம், நவ 18 – கலைஞர்கள் உட்பட போதைப் பொருளுக்கு அடிமையான இஸ்லாமிய மலாய்க்கார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராப்புடின் இட்ரிஷ் ஷா தனது கவலையை தெரிவித்திருக்கிறார். ( AADK ) எனப்படும் தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு நிறுவனம் மலேசியாவில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் அதற்கு அடிமையானவர்கள் குறித்து வெளியிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் சிலாங்கூர் அரச அலுவலகம் முகநூலில் வெளியிட்ட பதிவின் மூலம் அவர் இதனை தெரிவித்தார். கடந்த ஆண்டைவிட மொத்த போதைப் பித்தர்களின் எண்ணிக்கை 31.6 விழுக்காடு உயர்ந்துள்ளது. இஸ்லாமிய சமயத்தைக் கொண்ட மலாய்க்காரர்களில் சராசரி 76.8 விழுக்காட்டினர் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். மற்றவர்களை கவரக்கூடிய ஆற்றலைக் கொண்ட மலாய்க்கார இஸ்லாமியர்களான இளம் கலைஞர்களும் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.
எனவே இளம் தலைமுறையினர் போதைப் பொருளிலிருந்து விலகியிருக்க வேண்டும் என சுல்தான் ஷராபுடின் ஆலோசனை தெரிவித்தார். போதைப் பொருள் பழக்கத்தினால் தனிப்பட்ட நபர்களுக்கு எந்தவொரு நன்மையும் இல்லையென்பதையும் அவர் சுடடிக்காட்டினார். அதோடு போதைப் பொருளினால் பயங்கர குற்றச்செயல் மற்றும் தற்கொலை போன்ற சம்பவங்கள் ஏற்படுவதற்கு வழிவகுப்பதாகவும் அவர் கூறினார். போதைப் பொருள் அடிமைக்கு உள்ளாகுவதால் குடும்ப அமைப்பு முறையிலும் பாதிப்பு ஏற்படுவதோடு பாலியல் குற்றங்களும் அதிகரிப்பதாகவும் அவர் கூறினார்.