Latestஉலகம்மலேசியா

காசாவில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் தொடர்ந்து கவனம் செலுத்துமாறு ட்ரம்ப்புக்கு அன்வார் வலியுறுத்து

கோலாலம்பூர், அக்டோபர்-26,

காசா அமைதி முயற்சிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி நிரந்தர அமைதியை நிலைநாட்ட உதவுமாறு, மலேசியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப்பிடம் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

காசாவில் மோதல் மற்றும் மனிதநேய நெருக்கடி தொடர்ந்து மோசமடைந்து வருவதால், அங்கு அமைதியை அடைவதற்கான முயற்சிகளில் ட்ரம்ப் உறுதியாக இருக்க வேண்டுமென அன்வார் கேட்டுக் கொண்டார்.

காசா நிலைமையை “மனிதகுலத்தின் சோதனை” என்றும் வருணித்த அன்வார், தொடரும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பொது மக்களின் இடம்பெயர்வு அனைத்துலச் சட்டத்தை மீறும் வகையில் உள்ளதாக எச்சரித்தார்.

எனவே, வன்முறையை முடிவுக்குக் கொண்டு வந்து நிலைத்தன்மையை மீட்டெடுக்க அமெரிக்காவும் மற்றும் பிற முக்கிய சக்திகளும் ஆத்மார்த்தமான இராஜதந்திர முயற்சிகளை வழிநடத்த வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார்.

நீதி மற்றும் அமைதியின் பக்கமே மலேசியா உறுதியாக நிற்பதாகக் கூறிய அன்வார், அனைத்து தரப்பினரும் ‘அரசியலை விட மனிதநேயத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தினார்.

இன்று கோலாலம்பூர் மாநாட்டு மையமான KLCC-யில் கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் விழாவில் பேசிய போது அன்வர் அவ்வாறு கூறினார்.

47-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அதன் தொடர்புடைய மாநாடுகளுக்கு இடையே, ட்ரம்ப் மற்றும் அன்வார் முன்னிலையில் தாய்லாந்து – கம்போடிய பிரதமர்கள் இந்த அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அமெரிக்க அதிபர் என்ற முறையில் மலேசியாவுக்கான தனது முதல் அதிகாரப்பூர்வ பயணமாக, ட்ரம்ப் இன்று காலை கோலாலம்பூர் வந்தடைந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!