
கெய்ரோ, மார்ச்-14 – காசாவில் இருந்து பாலஸ்தீனர்களை நிரந்தரமாக வெளியேற்றும் திட்டத்தை திரும்பப் பெற்ற அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் முடிவை ஹமாஸ் தரப்பு வரவேற்றுள்ளது.
புதன்கிழமை வெள்ளை மாளிகையில் பேசிய போது, “காசாவிலிருந்து பாலஸ்தீனர்களை யாரும் வெளியேற்ற மாட்டார்கள்” எனக் கூறியதை அடுத்து ஹமாஸ் இந்த அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அனைத்து நிபந்தனைகளையும் இஸ்ரேல் செயல்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதன் மூலம் இந்த நிலைப்பாட்டை வலுப்படுத்த வேண்டும் என்றும் ஹமாஸ் அழைப்பு விடுத்துள்ளது.
பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்ற 17 மாத இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலுக்குப் பிறகு, கடந்த மாதம் போர் நிறுத்தம் ஏற்பட்ட போது, காசாவை அமெரிக்கா கைப்பற்றும் திட்டத்தை டிரம்ப் முன்மொழிந்தார்.
அங்குள்ள பாலஸ்தீனர்களை நிரந்தரமாக மறுகுடியேற்ற வேண்டும் என்று அவர் கூறியிருந்தது உலக நாடுகளைக் குறிப்பாக முஸ்லீம் நாடுகளை அதிர்ச்சியடைச் செய்தது.
மலேசியா உள்ளிட்ட பாலஸ்தீன ஆதரவு நாடுகள் அமெரிக்காவின் அத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
இந்நிலையில், டிரம்பின் மனமாறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரியில் தொடங்கிய 42 நாள் போர் நிறுத்தத்தை நீட்டிக்க மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், இஸ்ரேலும் ஹமாஸும் அடுத்த கட்ட போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.