
கோம்பாக், மார்ச்-12-ஜாலான் கோம்பாக் லாமாவில் அமைந்துள்ள காராக் சிவன் கோயில் எனப்படும் ஓம் ஸ்ரீ ஆத்ம அருள் ஜோதி முனீஸ்வரர் ஆலயம் மீதான எந்தவொரு அமுலாக்க நடவடிக்கையையும் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு, ஆலய நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
சிலாங்கூர் காட்டு இலாகாவுடன் நேற்று நடத்திய ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ஆலய நிர்வாகத்தினர் அக்கோரிக்கையை வலியுறுத்தினர்.
அக்கூட்டத்தில், ஆலயத்தின் வரலாற்றுப் பின்னணி, 1978 முதல் மறைந்த சித்திரா சேனன் வழிநடத்திய ஆன்மிகச் செயல்பாடுகள், தியானம், யோகா, சமூக வழிகாட்டுதல் போன்றவை விரிவாக விளக்கப்பட்டன.
காலப்போக்கில், பக்தர்களின் முயற்சியால் ஆலயத் தளம் வளர்ந்தது.
மேலும், காட்டு இலாகாவுடன் முன்பு நடைபெற்ற நிர்வாகப் பதிவுகள், Class E Permit மற்றும் அதிகாரப்பூர்வ இரசீதுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனால், அந்த காலத்தில் அதிகாரிகள் ஆலயச் செயல்பாடுகளை அறிந்திருந்தனர் என்பதும் தெரியவந்தது.
ஆலயம், வணிக நோக்கமின்றி, பக்தர்களுக்கான வழிபாடு மற்றும் ஆன்மிகப் பயிற்சிகளுக்காக மட்டுமே இயங்குகிறது என்பதும் சுட்டிக் காட்டப்பட்டது.
இந்நிலையில் இவ்விவகாரம், விரைவில் நடைபெறவுள்ள LIMAS எனப்படும் சிலாங்கூர் மாநில புத்தம், கிறிஸ்தவம், இந்து, சீக்கியம், தாவோ மதங்களுக்காக சிறப்பு செயற்குழு கூட்டத்தில் மேற்கொண்டு விவாதிக்கப்படும்.
அதுவரை, மாநில அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து, சமநிலையான தீர்வை காண ஆலய நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது.
பக்தர்கள் வழக்கம்போல அமைதியாக ஆலயத்திற்கு வந்து வழிபடலாம்.
அதே சமயம், பக்தர்களும் பொது மக்களும் அமைதி காத்து, அதிகாரப்பூர்வ வழிகளில் இவ்விவகாரம் கையாளப்பட வழி விட வேண்டும் என, அறிக்கை வாயிலாக அது கேட்டுக் கொண்டுள்ளது.



