
புத்ராஜெயா, ஜனவரி-23-“வெளிநாட்டு கால்பந்தாட்ட வீரர்களுக்கு குடியுரிமை எளிதாக கிடைக்கிறது; எனக்கு ஏன் இல்லை?” …
பேராக் ஈப்போவில் மலேசியத் தந்தைக்கு பிறந்த போதிலும், குடியுரிமை இன்றி போராடி வரும் 24 வயது இளைஞர் ஹரிதரன் முகுந்தன், இன்று புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றத்திடம் கேட்ட கேள்வி அது!
2001-ல் ஈப்போ மருத்துவமனையில் பிறந்தவர் இந்த ஹரிதரன்…
தாயார் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்; ஹரிதரனுக்கு சுமார் ஒன்றரை வயது இருக்கும் போது இவரை விட்டு தாய் சென்று விட்டார்.
இந்நிலையில், ஹரிதரனுக்கு 2002 ல் மலேசியக் கடப்பிதழ் வழங்கப்பட்டாலும், 2009-ல் புதுப்பித்த பிறப்புச் சான்றிதழில் “குடியுரிமை இல்லை” என்றே காட்டப்பட்டது.
இதனால் MyKad கிடைக்காமல், உயர்கல்விக்கான PTPTN கடன் உள்ளிட்ட பல சலுகைகளைப் பெறுவதில் இவர் தடைகளை எதிர்நோக்குகிறார்.
தேசிய அணிக்காக விளையாடிய 7 கலப்பு மரபின கால்பந்தாட்ட வீரர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டதை நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டி, “மலேசிய தந்தைக்குப் பிறந்த ஹரிதரனுக்கு ஏன் அந்த அங்கீகாரம் இல்லை?” என அவரது வழக்கறிஞர் ரேணுகா ராமய்யா வாதிட்டார்.
“அவருக்கு இப்போது ஒரு குழந்தை பிறந்துள்ளது, ஆனால் இந்த குடியுரிமை பிரச்னையால் அவரது திருமணத்தைப் பதிவு செய்ய முடியாமல் உள்ளது”
ஹரிதரனின் மனைவி மலேசியர் என்பதால், அவரது குழந்தையும் மலேசிய குடியுரிமை பெற்றவரே; தனது தந்தையைப் போல் குழந்தையும் குடியுரிமையின்றி இருக்க வேண்டிய நிலை இல்லை என ரேணுகா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த வழக்கிற்கு இன்னமும் தீர்வு இல்லை.



