
கின்றாரா, மார்ச்-3 – சிலாங்கூர், பூச்சோங், கின்றாராவில் உள்ள ஸ்ரீ சக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு அவசரமாக நீர் விநியோகம் தேவைப்படுகிறது.
அதற்கு ஆவன செய்யுமாறு இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவுக்கு, ஆலய நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கோபிந்த் சிங்கை சந்தித்துப் பேசியிருந்தோம்;
இந்நிலையில், நேற்று முதல் ஆலயத்திற்கான தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஆலயத்தின் செயலாளர் புனிதன் பாண்டியன் கூறினார்.
கின்றாரா தமிழ்ப் பள்ளியின் பின்னாலிருக்கும் பழைய இரும்பு சாமான் விற்கும் தளத்தைச் சுத்தம் செய்யும் பணிகள் காரணமாக கோயிலுக்கான நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் இல்லாததால் தெய்வச் சிலைகளுக்கான அபிஷேகம், மக்களுக்கான உணவு விநியோகம் மற்றும் கோயில் பராமரிப்பு பணிகள் போன்ற தினசரி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
அதிகாரத் தரப்பைக் கேட்டால், நிலப் பிரச்னை உட்பட பல்வேறு காரணங்களைக் கூறி எங்களை அலைக்கழிக்கிறார்கள்.
எனவே, கோயில் நிலப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை, தற்காலிக நீர் விநியோகத்தைப் பெறுவதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் செய்ய வேண்டுமென புனிதன் கேட்டுக் கொண்டார்.
இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படாமலிருக்க, கோயில் நிர்வாகம் முன்கூட்டியே செப்பூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் அலுவலகத்திற்கு ஒரு அறிக்கைச் சமர்ப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நெடுங்காலமாக நீடிக்கும் இந்த சக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலய நிலப் பிரச்னைக்கு அண்மையில் அங்கு வருகைப் புரிந்திருந்த கோபிந்த் சிங், அனைவரின் ஒத்துழைப்பு இருந்தால் அப்பிரச்னைக்குத் தீர்வுக் காண முடியுமெனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.