ஜோர்ஜ்டவுன், டிசம்பர்-27, கிறிஸ்மஸ் மரம் மற்றும் அலங்காரங்களுடன் புகைப்படங்கள் எடுப்பதால், தங்களின் சமய நம்பிக்கைக் கேள்வி எழுப்பப்படுமென்றால், முஸ்லீம்கள் அதனைத் தவிர்ப்பதே நல்லது.
பினாங்கு முஃப்தி சுக்கி ஒத்மான் (Sukki Othman) அவ்வாறு ஆலோசனைக் கூறியுள்ளார்.
எனினும், வெறும் அழகுக்காக அல்லது நினைவுக்காக என்றால் புகைப்படங்கள் எடுப்பதில் தவறில்லை.
நோக்கம் மற்றும் சூழலுக்கு ஏற்ப அந்த ‘அனுமதி’ மாறுபடும் என்றாலும், அவ்விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லதே என்றார் அவர்.
கிறிஸ்மஸ் மரங்களும் அலங்காரங்களும் வழக்கமாக கிறிஸ்துவ கொண்டாட்டங்களுடன் தொடர்புப்படுத்தப்படும்.
எனவே, புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் எடுப்பது இன்னொரு மதத்தை ஆதரிப்பதாகவோ கொண்டாடுவதாகவோ தெரிந்தால் அது இஸ்லாத்துக்கு முரணானது என சுக்கி சுட்டிக் காட்டியதாக Kosmo நாளிதழ் கூறியது.
கிறிஸ்மஸ் அலங்காரங்களுடன் முஸ்லீம்கள் செல்ஃபி மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக ஊடகங்களில் பகிரும் போக்கு அண்மையக் காலமாக அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.
புத்ராஜெயாவில் வீடமைப்பு-ஊராட்சித் துறை அமைச்சின் கட்டடத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸ் கேரல் நிகழ்ச்சியும் கூட முன்னதாக சர்ச்சையானது.
முஸ்லீம்களை எப்படி அக்கொண்டாட்டத்தில் பங்கெடுக்கச் செய்யலாமென, பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் ஹனிஃப் ஜமாலுடின் (Hanif Jamaluddin) கேள்வியெழுப்பியிருந்தார்.
ஆனால், அதில் பங்கெடுக்குமாறு அமைச்சின் பணியாளர்கள் யாரும் கட்டாயப்படுத்தப்படவில்லை என்றும், கேரல் பாடியவர்கள் சபா – சரவாக்கைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள் என்றும் அமைச்சு தெளிவுப்படுத்தியது.