
கோலா கெடா, செப்டம்பர் -30,
200 ஆண்டுகளுக்கு முந்தைய கெடா சியாம் போர்காலத்தைச் சேர்ந்ததாக நம்பப்படும் யானைத் தலையொன்று, கோத்தா மரினா கடற்கரையோரத்தில் மீனவரால் கண்டெடுக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதி மீனவர், நேற்று காலை 10 மணியளவில் மீன்பிடித்துவிட்டு ஜெட்டிக்குத் திரும்பும் வழியில், பற்களும் தொண்டை எலும்பும் கொண்ட யானைத் தலையை கண்டதாக தெரிவித்தார்.
சுமார் 80 முதல் 100 கிலோ எடையுடைய அந்த யானை தலையின் மீது கடல் பாசி, நத்தைப் புழுக்கள் ஒட்டியிருந்தன எனவும் மணலில் பாதியாக புதைந்து இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் தனது குழுவினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்த , கெடா மாநில அருங்காட்சியக இயக்குநர் சுஹைடி ஷுக்ரி (Suhaidi Shukri) அந்தத் தலையை அங்காட்சியகத்திற்கு கொண்டு வந்து மேலான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
மேலும் யானையின் வயதை உறுதி செய்ய, பற்களும் எலும்புகளும் DNA பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது.
மலேசியா வரலாற்றுச் சங்கம் கெடா கிளைத் தலைவர் டாக்டர் இப்ராஹிம் (Dr Ibrahim Bakar) பாகர் கூறுகையில், கோலா கெடா பகுதியில் சுமார் 204 ஆண்டுகளுக்கு முன்பு சுல்தான் அக்மட் தஜுடின் ஹாலிம் ஷா (Ahmad Tajuddin Halim Shah II) காலத்தில் கெடா சியாம் போர் நடந்தது வரலாற்றுச் சான்றாக உள்ளது என்று தெரிவித்தார்.



