
கோலாலம்பூர், டிசம்பர்-30 – பினாங்கு மற்றும் கெடாவில் பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய Gang Rusa Boy வன்முறை கும்பலை போலீஸார் முறியடித்துள்ளனர்.
முன்பு Gang 35 என அறியப்பட்ட அக்கும்பல் G. R. ரமேஸ் என்பவரின் தலைமையில் 2020 முதல் சுங்கை பட்டாணி, கூலிம் மற்றும் பினாங்கின் சில இடங்களில் செயல்பட்டு வந்துள்ளது.
கடந்தாண்டு முதல் குறைந்தது 2 கொலைச் சம்பவங்களுடன் அக்கும்பல் தொடர்புப் படுத்தப்படுவதாக, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம். குமார் கூறினார்.
இந்நிலையில், நவம்பர் கடைசி முதல் டிசம்பர் தொடக்கம் வரை ஒருங்கிணைந்த Op Tiga சோதனை நடவடிக்கையில், 24 முதல் 42 வயதுக்கிடையிலான 17 பேர் கைதுச் செய்யப்பட்டனர்.
அனைவருக்குமே, கொலை, கும்பலாகக் கொள்ளையிடுதல், சுடும் ஆயுதங்கள் பயன்படுத்தியது, மோசமான காயங்களை ஏற்படுத்தியது, போதைப்பொருள் கடத்தியது என பழையக் குற்றப்பதிவுகள் உள்ளன.
அவர்களில் 7 பேர், 5 ஆண்டுகள் தண்டனை முடிந்து அண்மையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் ஆவர்.
சிறையிலிருந்து வெளியானப் பிறகும் பழையபடி அவர்கள் வேலையைக் காட்டியுள்ளனர்.
தாக்குதல், பணம் வசூலிப்பு, போதைப்பொருள் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி குழுவை வைத்து மிகவும் ‘நேர்த்தியாக’ அக்கும்பல் செயல்பட்டு வந்துள்ளது.
சந்தேக நபர்கள் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுமென்பதையும் குமார் உறுதிப்படுத்தினார்.
அக்கும்பலின் செயல்பாடுகள் முறியடிக்கப்பட்டாலும், இன்னமும் 15 பேர் வெளியிலிருக்கின்றனர்.
அவர்களுக்கு எதிரான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர்கள் விரைவிலேயே கைது செய்யப்படுவார்கள் என்றும் குமார் நம்பிக்கைத் தெரிவித்தார்.



