
கோலாலம்பூர், மார்ச் 24-கோலாலம்பூர் டாங் வாங்கி வட்டாரத்தில் குடிநுழைவுத் துறையின் அதிகாரியாக நடித்து வெளிநாட்டினரிடம் கொள்ளையடித்து வந்த ஆடவன் கைது செய்யப்பட்டான்.
டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத்துறையின் வேவு தகவலைத் தொடர்ந்து 32 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழி பிற்பகல் மணி 1.30 அளவில் கைது செய்யப்பட்டதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் சஷாலி அடாம் ( Sazalee Adam ) தெரிவித்தார்.
அந்த ஆடவன் தற்போது போலீஸ் விசாரணைக்கு உதவும் பொருட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.
அந்த நபர் குற்றச் செயலுக்கு பயன்படுத்தியதாக நம்பப்படும் உடைகள், ஒரு மோட்டார் சைக்கிள், தலைக்கவசம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
வெளிநாட்டு நபர்களின் கடப்பிதழ்களை கேட்பதற்கு முன் தன்னை அந்த ஆடவன் குடிநுழைவு அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் சற்று அசந்திருந்தபோது உடனடியாக அவர்களது பணப்பையை எடுத்துக்கொண்டு தப்பியோடும் வழக்கத்தை கொண்டிருந்ததாக இன்று வெளியிட்ட அறிக்கையில் சஷாலி அடாம் தெரிவித்தார்.



