குவாலா சிலாங்கூர், செப்டம்பர்-19, குவாலா சிலாங்கூரில் நகை வாங்குவது போல் நகைக் கடைக்குள் நுழைந்த பெண், 30,000 ரிங்கிட் மதிப்பிலான தங்கச் சங்கிலியுடன் கம்பி நீட்டினார்.
கடந்த திங்கட்கிழமை நண்பகல் வாக்கில் நிகழ்ந்த அச்சம்பவம் CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
அத்திருட்டு குறித்து நகைக் கடைப் பணியாளர் போலீசில் புகார் செய்ததாக, குவாலா சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டண்ட் அசாருடின் தஜூடின் (Azharudin Tajuddin) கூறினார்.
இதையடுத்து குற்றவியல் சட்டத்தின் 380-வது பிரிவின் கீழ் கைது செய்ய ஏதுவாக அப்பெண்ணைத் தேடி வருவதாக அவர் சொன்னார்.
முன்னதாக வைரலான 35 வினாடி வீடியோவில், தலை முக்காடு அணிந்த (purdah) பெண்ணொருவர் நகைக் கடைக்குள் நுழைந்து, நகைகளைப் போட்டு பார்ப்பது தெரிந்தது.
தங்கச் சங்கிலியைக் கழுத்தில் போட்டுப் பார்ப்பது போல் பாசாங்கு செய்தவர், கண்ணிமைக்கும் நேரத்தில் வெளியில் காத்திருந்த காரில் ஏறில் ஓட்டம் பிடித்தார்.