
கோலாலம்பூர், மார்ச்-30 – கூகள் வரைபடத்தில் (Google Maps) இந்து ஆலயங்கள் குறித்த தேடலின் போது ‘சட்டவிரோதக் கோயில்கள்’ எனக் காட்டப்படும் லேபலை நீக்க, கூகள் நிறுவனத்துடன் அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும்.
உரிமைக் கட்சியின் துணைத் தலைவர் டேவிட் மார்ஷல் அதனை வலியுறுத்தினார்.
இந்துகளை அவமதிக்கும் வகையிலான அச்செயலுக்குப் பொறுப்பானவர்களை விசாரிக்குமாறும், தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சிலையும் அவர் கேட்டுக் கொண்டார்.
அக்கோயில்களில் பெரும்பாலானவை 50 ஆண்டுகளுக்கு முன் குறிப்பாக தோட்டப்புறங்களிலும் உட்புறங்களிலும் கட்டப்பட்டவை; நாட்டுக்காக உழைத்த இந்தியத் தொழிலாளர்களால் அவைக் கட்டப்பட்டன.
அதற்காக அவை சட்டவிரோதமானவை என்று அழைப்பதெல்லாம் சரியல்ல என டேவிட் சொன்னார்.
அத்தகையச் செயல் சமூகத்தில் பிரிவினையையும் வெறுப்புணர்வையும் விதைத்து விடுமென அவர் எச்சரித்தார்.
நாடு முழுவதும் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள ஆலயங்களை ‘அடையாளம் காண்பதாகக்’ கூறிக் கொண்டு, facebook பக்கமொன்று அண்மையில் உருவாக்கப்பட்டது தெரிந்ததே.
மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய நில சர்ச்சை எழுந்ததை அடுத்து அப்பக்கம் உருவாக்கப்பட்டது.
அதற்குக் கண்டனங்கள் எழுந்த நிலையில் 2 தினங்களுக்கு முன்னர், மலேசியத் தொடர்பு-பல்லூடக ஆணையமான MCMC அந்த facebook பக்கத்தின் நிர்வாகியை விசாரணைக்கு அழைத்திருந்தது.
மஸ்ஜித் இந்தியா ஆலய இடமாற்ற விககாரம் தற்போது சுமூகமாகத் தீர்க்கப்பட்டுள்ளது; 50 மீட்டர் தொலைவில் அருகிலுள்ள இடத்திற்கு ஆலயம் இடமாறவுள்ள நிலையில், அங்கு மடானி மசூதி கட்டப்படவுள்ளது.