
கெமமான் , பிப் 24 – பள்ளி பஸ் ஒன்று கவிழ்ந்த விபத்தில் கெமமான் Seri Bendi தேசிய இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் காயம் அடைந்தனர்.
இன்று காலை மணி 6.50 அளவில் மாணவர்கள் அந்த பள்ளி பஸ்ஸில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது Jalan Kampung Sungai Mas சாலையிலிருந்து Kampung Padang Kubuவுக்கு செல்லும் சாலையில் செம்பனை தொழிற்சாலைக்கு முன் இந்த விபத்து நிகழ்ந்தது.
காயம் அடைந்த மாணவர்கள் அனைவரும் 13 வயது முதல் 17 வயதுடையவர்கள் ஆவர். வழக்கம்போல் 32 மாணவர்களை பள்ளிக்கு ஏற்றிச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக பஸ் ஓட்டுநரான 59 வயதுடைய ஹசிமி அகமட் ( Hashimi Ahmad) தெரிவித்தார்.
செம்பனை தொழிற்சாலைக்கு முன் பஸ் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலை ஈரமாகவும் எண்ணெய்யாகவும் இருந்ததால் கவிழ்ந்தது.
பஸ்ஸை கட்டுப்படுத்த முயன்றபோதிலும் சாலையின் வலதுபுறப் பகுதியில் அந்த பஸ் கவிழ்வதற்கு முன் ஒரு மரத்தை மோதியதாக ஹசிமி கூறினார்.
இந்த விபத்தை கெமமான் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan முகமட் ரஷி ரோஸ்லி ( Mohd Razi Rosli) உறுதிப்படுத்தினார்.
பஸ்ஸின் ஜன்னல் மற்றும் முன்புற பகுதியில் மோதிக்கொண்டதால் காயம் அடைந்த மாணவர்கள் கெமமான் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் வெளிநோயாளியாக சிகிச்சைப் பெற்றனர்.