Latestஉலகம்மலேசியா

கேத்தி பேரி சென்ற 11 நிமிட விண்வெளிப் பயணம் ‘நாடகமா’? சந்தேகத்தைக் கிளப்பும் இணையவாசிகள்

ஃபுளோரிடா, ஏப்ரல்-19- அமெரிக்க பாப் இசைப் பாடகி கேத்தி பேரி உட்பட வெறும் பெண்கள் மட்டுமே அண்மையில் விண்வெளிக்கு மேற்கொண்ட 11-நிமிடப் பயணம், முழுக்க முழுக்க ஒரு நாடகமே என இணையவாசிகள் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர்.

குறிப்பாக கேத்தி பேரியின் தலைமுடி தவறான திசையில் மிதப்பதை X பயனர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இதற்கு முன் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் சிக்கிக் கொண்ட நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸின் தலைமுடி, எப்போதும் மேல்நோக்கி ‘கன்னாபின்னா’ என விரிந்திருக்கும்.

ஆனால் கேத்தி பேரி மற்றும் அவருடன் சென்ற பெண்களின் தலைமுடி அப்படியில்லை; தலைமுடி பெரிதாக எதுவும் கலையாமல் இருப்பதிலிருந்தே இதுவொரு பித்தலாட்டம் தான் என அப்பட்டமாகத் தெரிவதாக கருத்துக்கள் குவிகின்றன.

எனினும், ஒரு X பயனர் சற்று மாறுபட்ட கருத்தைப் பதிவிட்டார்.

அதாவது விண்வெளிக்குச் செல்லும் முன்னரே அப்பெண்கள் சிகையலங்கார நிபுணர்களின் உதவியை நாடியிருக்கலாம்; அதுவே கூட, அவர்களின் தலைமுடி கலையாமல் போனதற்கு காரணமாக இருக்கலாமென்றார் அவர்.

இது தவிர, விண்கலத்தில் மிதக்கும் போது கேத்தி பேரியுடன் சென்ற செய்தியாளர் கேய்ல் கிங்கின் (Gayle King) கையும் மர்மமான முறையால் மறைந்து விடுவது ஒரு வீடியோவில் தெரிகிறது.

இதுவும் வலைத்தளவாசிகளின் ‘ஆந்தைக்’ கண்களில் எப்படியோ பட்டு விட்டது.

ஆக, green screen தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீடியோ எடுத்து விட்டு, வெற்றிகரமான விண்வெளிப் பயணம் என அவர்கள் நாடகமாடுவதாக வலைத்தளங்களில் சரமாரியாகக் குற்றச்சாட்டுகள் பறக்கின்றன.

எனினும் Blue Origin ராக்கெட் slow motion முறையிலான வீடியோவை வெளியிட்டு அக்குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பதை நிரூபித்துள்ளது.

வீடியோவை மெதுவாக ஓடவிட்டுப் பார்த்தால் கேய்ல் கிங்கின் கை எங்கும் மறையவில்லை என்பது நன்றாகத் தெரியும்.

கை மாயமானதாகக் கூறும் X பயனரின் வீடியோ சரியாக எடிட் செய்யப்படாததால் ஒருவேளை அப்படி தெரிந்திருக்கலாம் என Blue Origin கூறியது.

Jeff Bezoz-சின் Blue Origin ராக்கெட்டில் 11 நிமிடப் பயணமாக கேத்தி பேரியும் இதர 5 பெண்களும் ஏப்ரல் 14-காம் தேதி விண்வெளிக்குச் சென்று திரும்பினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!