
ஷா ஆலாம், ஏப்ரல்-30, பூச்சோங் புத்ரா ஹைய்ட்ஸில் எரிவாயுக் குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்ட வீடுகளைப் பழுதுபார்க்க, மத்திய அரசாங்கம் 40 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று அதனை அறிவித்தார்.
பழுதுபார்ப்புப் பணிகள் இவ்வாரம் தொடங்கி ஆண்டு இறுதிக்குள் முழுமைப் பெறுமென எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.
ஏப்ரல் 1 ஏற்பட்ட அவ்வெடிப்பில் தாமான் புத்ரா ஹார்மோனி மற்றும் கம்போங் குவாலா சுங்கை பாருவில் 81 வீடுகள் 40 விழுக்காட்டுக்கும் மேல் சேதமுற்றன.
மற்றொரு 81 வீடுகள் பகுதி சேதமடைந்தன; மேலும் 57 வீடுகள் சேதமடைந்தாலும் தீப்பற்றவில்லை.
இன்னும் 218 வீடுகள் எந்தவொரு சேதமுமின்றி தப்பித்தன.
பூச்சோங், கம்போங் தெங்காவில் உள்ள வீடுகளும் அவற்றிலடங்கும்.
புத்ரா ஹைய்ட்ஸில் முழுவதுமாக சேதமுற்ற வீடுகளை Sime Darby Bhd நிறுவனமும், கம்போங் குவாலா சுங்கை பாருவில் உள்ள வீடுகளை தேசிய வீடமைப்பு நிறுவனமும் பழுதுபார்க்கும் என அமிருடின் கூறினார்.