
சென்னை, ஜனவரி-23 – மாட்டுக் கோமியத்தில் மருத்துவ குணங்கள் இருப்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டிருப்பதாக சென்னையில் உள்ளாமுன்னணி கல்வி நிறுவனமான IIT-யின் இயக்குநர் காமக்கோடி தொடக்கி வைத்த சர்ச்சை இன்னமும் ஓயவில்லை.
கோமியம், நோய்களைத் நீக்கும் மிகப்பெரிய மருந்து; உடல் நலத்தைப் பாதிப்புக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி அதற்குள் இருக்கிறது;
காய்ச்சல், ஆஜீரணம் போன்றவை குணமாகும் என்பதால் அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென அவர் கூறியிருந்தார்.
அப்பேச்சுக்கு, பொங்கல் பண்டிகையிலிருந்து எதிர்ப்பும் ஆதரவுமாக களம் சூடுபிடித்துள்ளது.
தமிழகத்தில் குறிப்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் காமக்கோடியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முன்னணி கல்வியாளரே அப்படியொரு கருத்தைக் கூறியிருப்பது ஏற்புடையதாக இல்லை என திமுக, அதிமுக, சீமான் உள்ளிட்டோரிடமிருந்து காமக்கோடி மீது விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
அதே சமயம் காமக்கோடிக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் வருவதை மறுப்பதற்கில்லை.
குறிப்பாக பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் அவரின் கருத்தை ஆதரித்துள்ளனர்.
பாஜக மூத்தத் தலைவரும் மருத்துவருமான Dr தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், மாட்டிறைச்சி உணவாகும் போது கோமியத்தைக் குடிப்பதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பினார்.
கோமியத்தின் மருத்துவ குணங்கள் பல ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அவர் கூறிக் கொண்டார்.
தனது பேச்சு சர்ச்சையாகி ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பினாலும், காமக்கோடி அசருவதாக இல்லை; தான் சொல்லியக் கருத்தில் இன்னமும் உறுதியாக உள்ளார்.
தான் கூறியதை அமெரிக்காவில் 5 ஆய்வுக் கட்டுரைகள் அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளதாகவு, விரும்பினால் அதனை அனைவருக்கும் வெளியிடுவேன் என்றும் தைரியமாகக் கூறியுள்ளார்.