
கோலாலம்பூர், ஜனவரி-24 – கடந்த ஓராண்டாக தலைநகரில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கிளினிக்குகளில், குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனைகளில், வங்காளதேச ஆடவர்களான 10 போலி மருத்துவர்கள் கைதாகினர்.
நேற்று ஜாலான் துன் தான் சியூ சின், லெபோ புடு, மற்றும் ஜாலான் சிலாங்கில் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் இணைந்து அந்த அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கைதான அந்த போலி மருத்துவர்கள் 31 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என, குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தோ ஜகாரியா ஷாபன் (Datuk Zakaria Shaaban) தெரிவித்தார்.
அவர்களில் ஒருவரிடம் சேவைத் துறைக்கான தற்காலிக வேலை பெர்மிட்டும், 6 பேருக்கு கட்டுமானத் துறைக்கான தற்காலிக வேலை பெர்மிட்டும் இருந்தன;
இருவர் அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிகமாக தங்கியிருப்பதும், மற்றொருவரிடம் முறையான பயணம் பத்திரம் எதுவும் இல்லையென்பதும் தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
போலி மருத்துவ உபகரணங்கள், மருந்து மாத்திரைகள், மற்றும் மருந்து விற்பனையின் மூலம் கிடைத்ததாக நம்பப்படும் 800 ரிங்கிட் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.
சுகாதா அமைச்சில் பதிவு செய்யப்படாத 502 வகையான மருந்துகளும் கைப்பற்றப்பட்டன; பறிமுதல் செய்யப்பட்டவற்றின் மொத்த மதிப்பு 265,192 ரிங்கிட்டாகும்.
200 முதல் 500 ரிங்கிட் வரை கட்டணமாக வாங்கிக் கொண்டு சுற்றுலாப் பயணிகளாக வரும் வங்கதேச பிரஜைகளால் அம்மருந்துகள் இந்நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன.
வங்காளதேச வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே சேவை வழங்கும் இந்த சட்டவிரோத கிளினிக்குகளில், சிகிச்சைக் கட்டணமாக 50 முதல் 200 ரிங்கிட் வரையில் விதிக்கப்படுகிறது.