கோலாலம்பூர், டிசம்பர்-22, கோலாலம்பூர் மற்றும் பஹாங், கெந்திங் மலையில் 5 விபச்சார விடுதிகளை புக்கிட் அமான் போலீஸ் ஏக காலத்தில் முற்றுகையிட்டுள்ளது.
அவையனைத்தும் இணையத் தளங்கள் வாயிலாக விளம்பரப்படுத்தப்பட்டு செயல்பட்டு வந்தவையாகும்.
ஒரு வார காலமாக கண்காணித்தும் வேவுப் பார்த்தும், வெள்ளிக்கிழமை மாலை அந்த அதிரடிச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த Operasi Noda சோதனைகளில் 21 வயது முதல் 54 வயது வரையிலான 56 வெளிநாட்டுப் பெண்கள் கைதானதாக, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ மொஹமட் ஷுஹாய்லி மொஹமட் சேய்ன் (Datuk Seri Mohd Shuhaily Mohd Zain) கூறினார்.
வியட்நாம், தாய்லாந்து, லாவோஸ் மற்றும் இந்தோனீசிய விலைமாதர்களின் சேவைக்கு, வாடிக்கையாளர்களுக்கு 4 மணி நேரத்திற்கு 1,200 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்படுகிறது.
56 விலைமாதர்கள் தவிர்த்து, அவ்விரு ஆபாச இணையத் தளங்களை நிர்வகித்து வருவதோடு, WhatsApp மற்றும் Telegram வாயிலாக வாடிக்கையாளர்களின் தங்குமிடத்திற்குப் பொறுப்பான 2 உள்ளூர் பெண்கள் உட்பட நால்வரும் கைதாகியுள்ளனர்.
விலைமாதர்களை கொண்டுச் செல்வதும் கொண்டு வந்து விடுவதுமான வேலைகளைப் பார்த்து வந்த 2 உள்ளூர் ஆடவர்களும் கைதுச் செய்யப்பட்டனர்.
11,490 ரிங்கிட் ரொக்கம், இரு CCTV கேமராக்கள், 15 கைப்பேசிகள், ஆணுறைகள், உடம்புபிடி தைலம் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதானவர்கள் குற்றவியல் சட்டத்தின் கீழும் குடிநுழைவுச் சட்டத்தின் கீழும் விசாரிக்கப்படவுள்ளனர்.