கோலாலம்பூர், அக்டோபர் 4 – லெபோ அம்பாங் பாரம்பரிய வர்த்தகர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் அக்டோபர் 12ஆம் திகதி ‘பிரதமருடன் தீபாவளி’ எனும் இன்னிசை கலை நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.
லெபோ அம்பாங்கில் ஒவ்வொரு வருடமும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் இந்நிகழ்ச்சியில், இவ்வருடம் ம.இ.காவின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் உறுதியாகக் கலந்து கொள்ளும் நிலையில், பிற அமைச்சர்களும் கலந்து கொள்வர்கள் என அச்சங்கம் கூறியிருக்கிறது.
மாலை 3 மணி தொடங்கி நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் உள்ளூர் கலைஞர்களின் இசை படைப்புகளுடன், பொதுமக்களுக்குத் தீபாவளி அன்பளிப்புகளும் உள்ளதாக, அதன் தலைவர் முகமட் இஸ்மாயில் (Mohamed Ismail) நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இசை நிகழ்ச்சி மட்டுமல்லாது, தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 25 மாணவர்களுக்கும் உதவிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
இதனிடையே, பொதுமக்கள் தீபாவளிக்காகப் பொருட்கள் வாங்குவதற்கு தீபாவளி சந்தையும் அங்கு ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.
லெபோ அம்பாங் சாலையில் ஏதிர்வரும் அக்டோபர் 12ஆம் திகதி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில், பொதுமக்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.