Latestமலேசியா

கோவில் பிரச்னையும் வருகிற 16ஆவது பொது தேர்தலும், ஒரு கண்ணோட்டம் – அரசியல், சமூக பொருளாதார ஆய்வாளர் டத்தோ மு. பெரியசாமி

அமெரிக்கா இஸ்ரேல் கூட்டாக ஈரான் நாட்டின் மீது போர் தொடுத்தது இன்று உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இப்போரினால் பெட்ரோல் எண்ணெயின் விலை ஏற்றம் காணும் என எதிர்பார்க்கலாம். ஈரான்  கச்சா எண்ணெயை மட்டும் ஏற்றுமதி செய்யும் நாடு அல்ல;அத்தோடு இவ்வெண்ணைகளை ஏற்றிச் செல்லும்  கப்பல் வழியான ‘ஹொர்முஸ்’  நீரிணையை ஈரான் தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளது. போர் தொடங்கிய காலம் முதல் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதனுடன் கூட்டுச் சேர்ந்துள்ள நாடுகளின் கப்பல்கள் இந்த நீரிணையைப் பாதுகாப்பு காரணமாகப் பயன்படுத்துவதைக் குறைத்து வருகிறது. கடந்த பிப்ரவரி முதல் ஏறக்குறைய 90% கப்பல் போக்குவரத்து இந்த நீரிணையைப் பயன்படித்துவதிலிருந்து குறைந்து விட்டது. இதனால் பெட்ரோல் விலை ஏற்றம் காணக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

எண்ணெய் விலை ஏற்றத்தினால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் ஏற்றம் காணக்கூடிய சாத்தியம் உண்டு. ஏற்கெனவே விலை வாசி ஏற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மலேசியர்கள் மேலும் சிரமத்தை எதிர் நோக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. பொருளாதார பிரச்சனையை நாடு எதிர் நோக்கி இருக்கின்ற இந்த வேளையில் ஒரு சிலர் சமீபகாலமாக சமூகங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது வருந்தத்தக்கது;  குறிப்பாக ஆங்காங்கே கோவில்  பிரச்சனைகளை எழுப்புவது நாட்டுக்கும் மக்களுக்கும் உகந்ததல்ல.

இந்நாட்டைப் பொருத்தமட்டில் ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலனித்துவ ஆட்சியின்போது ஆங்காங்கே கோயில்கள் கட்டப்பட்டது அனைவரும் அறிந்ததே. இது மறுக்கமுடியாத வரலாற்று உண்மை;  குறிப்பாக ஆங்கிலேயர் வசமிருந்த தோட்டங்களில் அவர்களின் அனுமதியுடன் கோவில்கள் கட்டப்பட்டன. ஆங்கிலேய அரசு கோவில்கள் கட்டுவதற்கு முழு ஆதரவினைத் தந்தது. அத்தோடு தோட்டங்களில் தமிழ்ப்பள்ளிகளும் ஆங்கிலேயர்களின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று தோட்டங்கள் துண்டாடப்பட்டு உரிமை கைமாறியது. இத்தோட்டங்களை வாங்கியவர்கள் இந்தக் கோவில்களை அகற்றுவதற்கு நீதிமன்றம்வரை செல்கின்றனர். ஒருசில இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளனர்.

இதற்கிடையே ஒரு சிலர் சொந்த விருப்பத்தின் பேரில் ஆங்காங்கே கோவில்களைக் கட்டி வழிபட்டு வருகின்றனர். சில சமயங்களில் ஒருசிலர் தனியார் அல்லது அரசாங்க புறம்போக்கு நிலங்களில் கோவில்களை அமைத்து வழிப்பட்டு வருகின்றனர். இவ்வாறு கட்டப்படுகின்ற நிலங்கள் 1965 நில சட்டத்தின் அடிப்படையில் முறையாக உரிமையாளர்களிடமிருந்து  வாங்கப்படுகின்றன. பெரும்பாலான  கோவில்கள் முறையாக அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றுள்ளன. ஒருசில கோவில்களின் அரசாங்க மற்றும் நகர சபை அனுமதி விண்ணப்பம் மாநில,மாவட்ட நில அலுவலகத்தால் மற்றும் நகர சபையால் இழுபறியாக இருந்து வருகிறது.

இதற்கிடையே , இன்னும் ஒருசிலர் விருப்பம்போல் தனது குடியிருப்புப் பகுதிக்கு அருகாமையில்  காலியா இருக்கின்ற புறம்போக்கு அரசாங்க, தனியார் நிலங்களில் முறையான அனுமதி பெறாமல் சிறிய கோவில்களைக் கட்டி வழிப்பட்டு வருகின்றனர். இதற்குக் காரணம் ‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ எனும் ஔவையின் மூதுரைக்கு ஏற்ப தமிழர்கள் வழிபட்டு வருகின்றனர்.

ஆகவே, இந்நாட்டைப் பொருத்தமட்டில் மேலே கூறப்பட்ட மூன்று வகையான கோவில்கள் கட்டப்பட்டு வழிபாட்டுத்தளங்களாக மாற்றங்கண்டுள்ளன.  இக்கோவில்கள் அனைத்தையும் ‘கோவில் ஹராம்’ என ஒரே வட்டத்தில் வைத்து ஒரு சிலர் வர்ணிப்பது நியாயமற்றதாகும். அனுமதி கேட்பவர்களுக்கு நில இலாகாவும், நகர சபையும் அனுமதி வழங்காதது யார் குற்றம். இந்தியர்களின் குற்றமா? அல்லது அரசாங்கத்தின் குற்றமா? கோவில் ஹராம் என்று கூறுவதைத் தவிர்த்து முறையான ‘அனுமதி பெறாமல்’  கட்டப்பட்ட கோவில்கள் எனக் குறிப்பிடலாமே!. கோயில்களை ‘ஹராம்’  என சொல்வது  இந்தியர்களைப் பெரிதும் புண்படுத்தியிருக்கிறது. ஹராம் எனும் சொல்லைப் பயன்படுத்தி ஒருசிலர் அரசியல் இலாபம் பெற முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.

இக்கோவில் பிரச்சனை எழுந்தது முதல் இந்தியர்களிடையே நாடு முழுவதும் அரசாங்கத்தின் மீது அதிருப்தி அலை நிலவிவருகிறது. இக்கோவில் பிரச்சனையை அரசாங்கம் நேர்மையான முறையில்,  நடுநிலையாகக் கையாளவில்லை என பெரும்பாலான இந்தியர்கள்,  கட்சி வேறுபாடின்றி கருதுகின்றனர். நாட்டின் அரசியல் வரலாற்றில்,  2008-ல் எழுந்த கோவில் பிரச்சனையினால் இந்தியர்கள் ஒன்றிணைந்து நாட்டின் அரசியலில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தனர். வரலாறு திரும்பும் என்பார்கள். ஆகவே, இம்முறை கோவில் ஹராம் என்ற  பிரச்சனையால் பெரும் அதிருப்தி அடைந்துள்ள இந்தியர்கள் ஒன்று கூடி அரசியல் மாற்றம் காண தயாராகி வருகின்றனர் என கணிக்கப்படுகிறது.

அரசாங்கம் உடனடியாக இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காணாவிட்டால் வருகின்ற 16-ஆவது பொதுத் தேர்தலில் அரசியல் சுனாமி ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதை அரசாங்கம் உணர வேண்டும். அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் ஏற்படுத்தியுள்ள போரினால் உலக அரசியல் தடுமாறி இருக்கின்ற  இவ்வேளையில் இக்கோவில் பிரச்சனை மலேசிய அரசியல் நிலைத்தன்மைக்கு கேடு விளைவிக்கும். ஆகவே, இப்பிரச்சனைக்கு உடனே மடானி அரசாங்கம் உடனடித் தீர்வு காண வேண்டும் என அரசியல், சமூக பொருளாதார ஆய்வாளர் டத்தோ மு. பெரியசாமி

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!