
கோலாலம்பூர், மார்ச்-19 – சர்ச்சைக்குரிய சமய போதகர் Dr சகிர் நாய்க்கிற்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல்களை, உள்துறை அமைச்சர் மறுத்துள்ளார்.
ஆறாண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தை யாரோ மறுபதிவிட்டு தவறான தகவலைப் பரப்பியுள்ளதாக டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
அமைச்சர் குறிப்பிட்ட அந்தப் புகைப்படம் பெர்காசா அமைப்பின் தலைவர் டத்தோ இப்ராஹிம் அலியிடமிருந்து சகிர் நாய்க் ‘Pahlawan Perkasa’ விருதை வாங்கும் போது எடுத்ததாகும்.
இவ்வேளையில், அப்புகைப்படத்தை இப்ராஹிம் அலியும் உறுதிப்படுத்தினார்.
இது, அரசியல் ஆதாயத்துக்காக மலேசியர்களைக் குழப்பும் பொறுப்பற்றச் செயலென அவர் சாடினார்.
நிரந்தர வசிப்பிடவாசியான சகிர் நாய்க், தாம் மலேசியக் குடியுரிமைக்கு ஆசைப்படவில்லை என்றும், அனைத்தும் சுமூகமானதும் உரிய நேரத்தில் இந்தியா திரும்புவேன் என்றும் தம்மிடம் கூறியிருப்பதாக இப்ராஹிம் அலி தெரிவித்தார்.
மும்பையைத் தளமாகக் கொண்ட சகிர் நாய்க், சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் மற்றும் வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளின் மூலம் தீவிரவாதத்தை வளர்ப்பதாகக் கூறி 2016 முதல் இந்திய அரசாங்கத்தால் தேடப்படுகிறார்.
2015-ஆம் ஆண்டு அப்போதைய தேசிய முன்னணி அரசாங்கம் அவருக்கு நிரந்தர வசிப்பிடத் தகுதியை வழங்கியது.
எனினும் இங்கும் தனது மத சொற்பொழிவுகளின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவர் பிரச்னையில் சிக்கினார்.
இதையடுத்து 2019-ஆம் ஆண்டு பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் பொது இடங்களில் சொற்பொழிவாற்ற அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், மலேசியாவில் பொது இடங்களில் பேச சகிர் நாய்க்கிற்கு தற்போது தடையேதுமில்லை என கடந்த மாதம் அரசாங்கம் உறுதிப்படுத்தியிருந்தது.