கோலாலம்பூர், டிசம்பர்-19, 7 மில்லியன் ரிங்கிட்டை உட்படுத்திய சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பான அனைத்து 17 குற்றச்சாட்டுகளிலிருந்தும் டத்தின் ஸ்ரீ ரொஸ்மா மன்சோர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் துணைவியாருமான ரொஸ்மா மீதான அக்குற்றச்சாட்டுகள், சட்டத்திற்குப் புறம்பானவை;
அதோடு குற்றவியல் நடைமுறை சட்டத்தை அவைப் பின்பற்றியிருக்கவில்லை.
எனவே, வழக்கு விசாரணை நடைபெற தேவையில்லாமலேயே ரொஸ்மாவை விடுவிப்பதாக, கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி கே.முனியாண்டி அதிரடியாகத் தீர்ப்பளித்தார்.
73 வயது ரொஸ்மா, அக்குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்யுமாறு கடந்தாண்டு செப்டம்பரில் விண்ணப்பம் செய்திருந்தார்.
தம் மீதான அக்குற்றச்சாட்டுகள் பலவீனமானவை என்பதுடன், தாம் புரிந்ததாகக் கூறப்படும் குற்றங்களின் முக்கிய அம்சங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை எனக் கூறி ரொஸ்மா அவ்விண்ணப்பத்தில் சுட்டிக் காட்டியிருந்தார்.