
கோலாலம்பூர், ஜனவரி-14, சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தாலோ அல்லது சட்ட மீறல்கள் புரிந்ததாக தகவல் கிடைத்தாலோ, தனிநபர்களின் கைப்பேசிகளை வாங்கி பரிசோதிக்க போலீஸுக்கு உரிமையுண்டு.
அதற்கு ஒத்துழைக்க மறுத்தால் கைதுச் செய்யப்பட வாய்ப்புண்டு.
அதற்கு சட்டத்திலேயே இடமிருப்பதாக தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் கூறினார்.
ஆபாசம், மிரட்டல் மற்றும் அச்சுறுத்தும் வகையிலான தொடர்புகளைக் கட்டுப்படுத்தும் 1998-ஆம் ஆண்டு தொடர்பு – பல்லூடக ஆணையச் சட்டத்தின் குற்றச்செயல் நடைமுறைப் பிரிவின் கீழ், போலீஸுக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் இன்ஸ்பெக்டர் பொறுப்பில் உள்ளவர்களும் அதற்கு மேலான அதிகாரத்தையுடையவர்கள் மட்டுமே கைப்பேசிகளை பரிசோதிக்க முடியும்;
அதுவும் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டே அவ்வாறு செய்ய முடியும்; காரணமே இல்லாமல் இஷ்டம் போல் செய்ய முடியாது என IGP சொன்னார்.
ஒருவேளை கைப்பேசிகளில் ஆபாச அம்சங்கள், சூதாட்ட செயலிகள் அல்லது மற்ற குற்ற அம்சங்கள் கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆக, சாலைத் தடுப்புச் சோதனைகளின் போது தனிநபர்களின் கைப்பேசியை பரிசோதிக்கும் போலீஸாரின் அதிகாரத்தை யாரும் கேள்வி எழுப்பக் கூடாது என அவர் நினைவுறுத்தினார்.
ஒருவரை தடுத்து அவரின் கைப்பேசியை வாங்கி பரிசோதிக்கும் போலீஸின் நடவடிக்கையை விமர்சித்து ஓர் ஆடவர் வெளியிட்ட வீடியோ வைரலாகியிருப்பது குறித்து IGP கருத்துரைத்தார்.