
கோலாலம்பூர், பிப்ரவரி-13 – பிரதமர் துறையில் சமய விவகாரங்களுக்கான அமைச்சை, இஸ்லாம் மற்றும் இஸ்லாம் அல்லாத அமைச்சுகள் என இரண்டாகப் பிரிக்குமாறு, அரசாங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பரிந்துரைத்துள்ளார்.
பல்லின மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தவும், எந்தவொரு தரப்பும் புறக்கணிக்கப்படாதிருப்பை உறுதிச் செய்யவும், அது அவசியமாகும் என, ரவூப் MP Chow Yu Hui கூறினார்.
இஸ்லாம் அல்லாத அமைச்சுக்கு, முஸ்லீம் அல்லாதோர் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கொண்ட ஒருவரை அமைச்சராக நியமிக்கலாம் என்றார் அவர்.
இரு அமைச்சர்கள் இருப்பதன் மூலம், மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மேலும் நியாயமாகக் கையாள முடியும்.
இருவரும் அணுக்கமாகத் தொடர்புக் கொள்வதன் மூலம், சமய விவகாரங்கள் சர்ச்சையாவதைத் தடுக்க முடியும் என, மக்களவையில் அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பான விவாதத்தில் பேசிய போது Chow Yu Hui சொன்னார்.
அதே சமயம், நெகிரி செம்பிலான், பினாங்கு, பேராக் போன்ற மாநிலங்களில் இஸ்லாமியர் அல்லாதோரின் நலன் காக்க, தனி ஆட்சிக் குழு பொறுப்பு உருவாக்கப்பட வேண்டுமென்றும் அவர் ஆலோசனைக் கூறினார்.
முஸ்லீம் அல்லாதோரின் சமய விழாக்கள், துக்கக் காரியங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்க, முஸ்லீம்களுக்கு புதிய வழிகாட்டிகளை உருவாக்க அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக, முன்னதாக சர்ச்சை வெடித்தது.
கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், அந்த உத்தேசப் பரிந்துரையை அமைச்சரவை இரத்துச் செய்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைக்கு அமைச்சரவையில் இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கென பிரதமர் துறையில் ஒருவர் அமைச்சராக உள்ளார்.
அதுவே, இஸ்லாம் அல்லாத விவகாரங்கள் தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ் வருகின்றன.