
புத்ராஜெயா, மார்ச்-6 – மற்ற மதத்தார் புண்படும்படியோ அல்லது 3R எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்கள் குறித்து சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை ஏற்றுவதோ அறவே ஏற்றுக் கொள்ள முடியாத செயலாகும்.
தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் அதனை நினைவுறுத்தியுள்ளார்.
ஏரா வானொலியின் சர்ச்சை வீடியோ தொடர்பில், விஜயன் சவரிநாதான், சா’ம்ரி வினோத், சரவணன் சண்முகம் மற்றும் Crime_Man என்ற பெயரைக் கொண்ட டிக் டோக் கணக்கு ஆகிய தரப்புகளைச் சுட்டிக் காட்டி அமைச்சர் அவ்வெச்சரிக்கையை விடுத்தார்.
சமூக ஊடகங்களில் அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்; எல்லை மீறிய செயலால் இன -மதங்களுக்கு இடையிலான சச்சரவுகளையும் தேசிய நல்லிணக்கத்துக்கும் பாதிப்பு ஏற்படும்.
எனவே, உணர்ச்சிகளைத் தூண்டி விடும் வகையில் பேசவதையோ செயலில் ஈடுபடுவதையோ அனைவரும் நிறுத்திக் கொள்ள வேண்டுமென, அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
மீறி செயல்படுவோர் மீது போலீஸும், மலேசியத் தொடர்பு-பல்லூடக ஆணையமான MACC-யும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இந்நேரத்தில் வலியுறுத்துவதாக அவர் சொன்னார்.
மக்களிடையே ஒற்றுமையையும் பரஸ்பர மரியாதையையும் வளர்த்திட, Kempen Cakap Baik-Baik பிரச்சார இயக்கத்தையும், Faham, Hormat, Terima ஒருமைப்பாட்டுக் கொள்கையையும் அமைச்சு முடுக்கி விட்டுள்ளதாகவும் ஏரன் அகோ கூறினார்.
ஏரா வானொலியின் ‘வேல் வேல்’ வீடியோவைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதட்ட சூழலில், தத்தம் மதங்களைத் தற்காத்தும், வேற்று மதத்தை இழிவுப்படுத்தியும் சில தரப்புகள் சமூக ஊடகங்களில் பதிவிடுவதும், வீடியோ வெளியிடுவதுமாக இருப்பதை அடுத்து அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.