சென்னை, அக்டோபர்-2, பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டொரு நாட்களில் வீடு திரும்புவார் என, சென்னை அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 30-ஆம் தேதி இரவு அங்கு அனுமதிக்கப்பட்டவருக்கு, இதயத்திற்குச் செல்லும் இரத்த நாளத்தில் (aorta) ஏற்பட்ட வீக்கத்தை சரி செய்ய அறுவை சிகிச்சையின்றி, endovascular repair முறையில் stend எனப்படும் உறைகுழாய் பொருத்தப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி சிகிச்சை முடிந்து அவரின் உடல் நிலை சீராக உள்ளது.
எனவே ரஜினிகாந்த் நலமுடன் வீடு திரும்புவார் என மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வரும் 74 வயது ரஜினிகாந்த் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி, அவரின் கோடிக்கணக்கான இரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.
அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் முதற்கொண்டு ஏராளமானோர் அவர் நலம்பெற வேண்டி வாழ்த்தினர்.
ரஜினிகாந்தின் 170-வது படமான ‘வேட்டையன்’ வரும் அக்டோபர் 10-ஆம் தேதி திரைக்கு வருகிறது.