
சுபாங் ஜெயா, ஏப் 4 – புத்ரா ஹைட்ஸ் பகுதியில் எரிவாயு குழாயில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 20 முதல் 30 செல்லப்பிராணிகள் மற்றும் வன விலங்குகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டன. பூனைகள், நாய்கள் மற்றும் மீன்கள் தவிர, இரண்டு பாம்புகள் மற்றும் ஒரு சுண்டெலியும் மீட்கப்பட்டதாக கைவிடப்பட்ட வளர்புப் பிராணிகளின் மலேசிய சங்கத்தின் தலைவர் ஆர். கலைவாணன் தெரிவித்தார்.
வீடுகளில் விட்டுச் செல்லப்பட்ட வளர்ப்பு பிராணிகளை மீட்பதற்கு பாதிக்கப்பட்ட பகுதிக்குள் அதிகாரிகளுடன் நுழைவதற்கு தங்கள் சங்கத்திற்கு நான்கு மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டதாக அவர் கூறினார். கடுமையான தீயின் விளைவாக நீர் மற்றும் காற்று தூய்மைக் கேட்டினால் வளர்ப்புப் பிராணிகள் மடிந்திருக்கலாம் என்பதில் சந்தேகம் இல்லை.
பிராணிகளை மீட்கும் பணியைச் தொடர, சம்பவம் நிகழ்ந்த இடத்திற்குள் நுழைவதற்கான அடுத்த அனுமதிக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம் என கலைவாணன் கூறினார்.SPCA எனப்படும் விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சங்கத்துடன் இணைந்து, பாதிக்கப்பட்ட பிராணிகளை காப்பாற்றவும், அவற்றுக்கு சிகிச்சை அளிக்கவும் உதவுவதில் எங்களது கடப்பாட்டை தொடர்வோம் என அவர் தெரிவித்தார்.
தற்போது வளர்ப்புப் பிராணிகளுக்கு தற்காலிக சிகிச்சை மையமாக செயல்படும் புத்ரா ஹைட்சிலுள்ள ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் சந்தித்தபோது கலைவாணன் இத்தகவலை வெளியிட்டார்.
மீட்கும் நடவடிக்கையின்போது சிக்கலான செயல்முறையால் அதிகமான வளர்ப்பு பிராணிகளை காப்பாற்றுவதில் சிரமம் ஏற்பட்டதையும் அவர் ஒப்புக்கொண்டார். நான்கு மணி நேரத்தின்போது , ஒரு மணி நேரத்திற்கு இரண்டு அதிகாரிகள் மட்டுமே குடியிருப்பு பகுதிகளில் நுழைவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மற்ற ஊழியர்கள் உள்ளே வருவார்கள். எங்களால் சொந்த வாகனங்களை பயன்படுத்த முடியாது. எனினும், அதிகாரிகளின் ஆலோசனைகளை பின்பற்றுவோம் என அவர் விவரித்தார்.