
மோஸ்கோ, டிசம்பர்-9,
அதிபர் பதவியைத் துறந்து சிரியாவிலிருந்து தப்பியோடிய பஷார் அல்-அசாட் (Bashar al-Asaad), தனது நெருங்கிய பங்காளி நாடான ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார்.
பஷாரும் அவரின் குடும்பத்தாரும் நள்ளிரவு வாக்கில் மோஸ்கோ சென்றடைந்தனர்.
மனிதநேய அடிப்படையில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க முடிவுச் செய்ததாக ரஷ்ய வெளியுறவு அமைச்சு கூறியது.
சிரியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அரசியல் தீர்வையே ரஷ்யா ஆதரிக்கிறது; எனவே, ஐநா முன்னெடுத்த பேச்சுவார்த்தைத் தொடரப்பட வேண்டுமென்றே கிரெம்லின் விரும்புவதாக வெளியுறவு அமைச்சு கூறியது.
சிரியாவில் ஆயுதமேந்திய கிளர்ச்சிக்காரர்களுடன் ரஷ்யா தொடர்புகொண்ட நிலையில், அங்குள்ள ரஷ்ய இராணுவத் தளத்தின் பாதுகாப்புக்கும், தூதர அலுவல்களுக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அது கூறிக் கொண்டது.
கடந்த 10 நாட்களில் முக்கிய நகரங்களைப் படிப்படியாக கைப்பற்றி முன்னேறிய கிளர்ச்சித் தரப்பு, நேற்று காலை தலைநகர் டமாஸ்கசைக் (Damasus) கைப்பற்றியது.
இதையடுத்து பஷாரின் சாம்ராஜ்யம் கவிழ்ந்து, 13 ஆண்டு கால உள்நாட்டுப் போரும் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.
50 ஆண்டுகளுக்கும் மேலான ஒரே குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுக் கட்டப்பட்டதை, சிரியா மக்கள் சாலைகளில் ஆடிப்பாடி கொண்டாடி வருகின்றனர்.