சிறைச்சாலையில் பாதுகாப்புக் கருதி தனி அறையில் வைக்கப்பட்ட சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன்
சிங்கப்பூர், அக்டோபர்-8 – சிங்கப்பூரில் 12 மாத சிறைவாசத்தைத் தொடங்கியுள்ள முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் , தனிநபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரை மற்ற கைதிகளுடன் ஒன்றாக வைக்காமல், தனி அறையில் வைக்க முடிவெடுக்கப்பட்டதாக சிங்கப்பூர் சிறைச்சாலை சேவைத் துறை (SPS) தெரிவித்தது.
பாதுகாப்பு மற்றும் மருத்துவ மதிப்பீடுகளை மேற்கொண்டதில், ஈஸ்வரனை மற்ற கைதிகளுடன் விட்டால், அது அவருக்கு அதிக ஆபத்தை கொண்டு வருமென SPS முடிவுச் செய்ததாக Channes News Asia செய்தி வெளியிட்டுள்ளது.
கழிப்பிடத்துடன் கூடிய ஈஸ்வரனின் அறை சுமார் 6.9 சதுர மீட்டர் அளவைக் கொண்டுள்ளது.
படுப்பதற்கு, வைக்கோலில் பின்னப்பட்ட ஒரு பாயும், இரு போர்வைகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
பின்புலம் கருதாது அனைத்துக் கைதிகளும் சமமாக நடத்தப்படுகின்றனர்; அனைவரும் ஒரே விதிமுறையைப் பின்பற்றியாக வேண்டுமென SPS விளக்கியது.
சிறைத்தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்த ஈஸ்வரன், நேற்று பிற்பகலில் அந்த ஓராண்டு சிறையைத் தொடங்கினார்.
அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி, விலை உயர்ந்த அன்பளிப்புகளைப் பெற்றது, நீதிக்கு இடையூறாக இருந்தது ஆகிய குற்றங்களுக்காக ஈஸ்வரன் சிறை சென்றுள்ளார்.