
ஈப்போ, நவம்பர்-12 – பேராக்கில் ம.இ.காவினரை உட்படுத்திய அனைத்து அரசியல் நியமனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது உண்மையா என, மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சரானி மொஹமட்டுக்கு மாநில ம.இ.கா கேள்வி எழுப்பியுள்ளது.
பேராக் ம.இ.கா தொடர்பு குழுத் தலைவர் தான் ஸ்ரீ எம். ராமசாமி நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அக்கேள்வியை முன்வைத்தார்.
பேராக் ஆட்சிக் குழு உறுப்பினரும் மாநில DAP உதவித் தலைவருமான டத்தோ A. சிவநேசன் கூறியதாக நவம்பர் 8-ஆம் தேதி ஊடகமொன்றில் வந்த செய்தி புருவத்தை உயர்த்தியுள்ளது.
ம.இ.கா தேசிய முன்னணியில் நீடிக்குமா இல்லையா என்பதை நவம்பர் 16-ஆம் தேதி அதன் பொதுப்பேரவை முடிவு செய்யும் வரை, அக்கட்சியினர் சம்பந்தப்பட்ட அரசியல் நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு சரானிக்கு சிவநேசன் அறிவுறுத்தியதாக அதில் கூறப்பட்டது.
ஒருவேளை அது உண்மையென்றால், தேசிய முன்னணி உள்விவகாரத்தில் DAP மூக்கை நுழைப்பது ஏன் என மந்திரி பெசார் விளக்க வேண்டும்.
இது பார்ப்பதற்கு, மாநில அரசு என்னமோ DAP-யின் கருணையால் தான் ஆட்சியில் இருப்பது போலவும், தேசிய முன்னணியின் கொள்கைகளையோ அல்லது அது பயணிக்கும் திசையையோ நிர்ணயிப்பதில் அம்னோ உண்மையில் அதிகாரமற்று கிடப்பது போலவும் தெரிவதாக ராமசாமி சாடினார்.
மந்திரி பெசாரைச் சந்திக்க கடந்தாண்டு முதலே தாங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கும் இதுவரை பதிலில்லை; இந்நிலையானது ம.இ.கா தொடர்ந்து மாற்றான் தாய் பிள்ளைப் போல் நடத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுவதாக அவர் சொன்னார்.
எனவே மந்திரி பெசார் உரிய விளக்கமளித்து ம.இ.காவின் கவலையைப் போக்க வேண்டுமென, ம.இ.கா தேசிய உதவித் தலைவருமான தான் ஸ்ரீ ராமசாமி கேட்டுக் கொண்டார்.



