
கோலாலம்பூர், ஆகஸ்ட்-12,
சிலாங்கூர் சுக்மா போட்டியில் சிலம்ப விளையாட்டு சேர்த்துக் கொள்ளப்படாமல் போன விவகாரத்தில், மக்கள் பிரதிநிதிகள் வாயே திறக்கவில்லை எனக் கூறப்படும் குற்றச்சாட்டை, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்திய அமைச்சர், துணையமைச்சர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்கவில்லை என, எதிர்கட்சிகள் உட்பட பலர் குற்றம் சாட்டுகின்றனர்.
மடானி அரசாங்கம் தொடர்ந்து இந்தியர்களைப் புறக்கணிக்கிறது என அவதூறும் பரப்பப்படுகிறது.
ஆனால், எல்லா விவகாரத்தையும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டியதில்லை; ஒற்றுமை அரசாங்கத்தில் இருப்பதால் சில விஷயங்களை அமைதியாகவே பேசித் தீர்க்க முடியும் என ராயர் தெளிவுப்படுத்தினார்.
உண்மையில், அமைச்சரவையில் நமது ஒரே பிரிதிநிதியான இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, இளைஞர்-விளையாட்டுத் துறை அமைச்சர் ஹானா இயோ ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
அதன் பலனாகத்தான், 2026 சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பத்தை கூடுதல் விளையாட்டாக இணைக்க தற்போது சிலாங்கூர் அரசு பரிந்துரைத்துள்ளது என்றார் அவர்.
ஆக மடானி அரசுக்கு மக்கள் குறிப்பாக இந்தியர்கள் மீது அக்கறையில்லை என்ற குற்றச்சாட்டு பொய்த்துப் போயிருப்பதாக, நாடாளுமன்றக் கட்டடத்தில் நேற்று நடத்தியக் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் ராயர் பேசினார்.
அதில் துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்களான வீ. கணபதிராவ், பி.பிரபாகரன், ஆர்.யுனேஸ்வரன், சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு ஆகியோரும் அதில் கலந்துகொண்டனர்.
சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம் ஏற்றுக்கொள்ளப்படுமா இல்லையா என்பதை சுக்மா உச்சமன்றம் விரைவில் முடிவுச் செய்யும்.