
லாஸ் ஏஞ்சலஸ், ஏப்ரல்-16, அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் சுரங்கப் பாதை உருவாக்க்கப்பட்டு நகைக் கடையிலிருந்து 20 மில்லியன் டாலர் மதிப்பிலான நகைகளும் ரொக்கப் பணமும் கொள்ளையிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வார இறுதியில் அந்த நூதனக் கொள்ளை நிகழ்ந்ததாக, ஒரு குடும்பமாக நடத்தி வரும் Love Jewels நகைக் கடை உரிமையாளர் கூறினார்.
பக்கத்திலிருக்கும் கைவிடப்பட்ட திரையரங்கைப் பயன்படுத்தி, கொள்ளையர்கள், கடைக்குள் சுரங்கப்பாதையைத் துளையிட்டுள்ளனர்; சுரங்கப் பாதையைப் பார்த்தால், பல வாரங்களாக அவர்கள் அச்செயலில் ஈடுபட்டிருக்கக் கூடுமென, உரிமையாளர் சந்தேகிக்கின்றார்.
யாருக்கும் தெரியாமல் ஒவ்வொரு நாள் இரவும் சிறிது சிறிதாக அவர்கள் சுரங்கத்தைத் தோண்டியிருக்க வேண்டும்; உள்ளே போதுமான இடம் தோண்டப்பட்ட பிறகே, அவர்கள் நகைக் கடையில் கைவரிசையைக் காட்டியிருக்க வேண்டும் என, உரிமையாளரின் மகன் சொன்னார்.
CCTV கேமராக்கள், அலாரம் போன்றவற்றை செயலிழக்கச் செய்து விட்டு ஐந்தாறு மணி நேரங்களில் அந்த நூதனக் கொள்ளை நடந்திருப்பதாக நம்பப்படுகிறது.
“தங்க வியாபாரத்தில், நாங்கள் எல்லாவற்றையும் மீண்டும் முதலீடு செய்வோம்; ஆக, கொள்ளையர்கள் கை வைத்த பெட்டகத்தில் என்னவெல்லாம் இருந்ததோ அவை தான் எங்களின் மொத்த சொத்து” என்றார் அவர்.
கொள்ளைப் போனதில் 20 மில்லியன் டாலர் இழப்பீட்டைச் சந்தித்திருப்பதாக உரிமையாளர் கூறினாலும், போலீஸார் அதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறினர்.