
செப்பாங், பிப்ரவரி-20 – மலேசியாவுக்குள் நுழைவதற்கான எந்தவொரு நிபந்தனையையும் பூர்த்திச் செய்யாத 68 வெளிநாட்டவர்கள், நாட்டுக்குள் நுழைய மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
KLIA 1-ல் அனைத்துலகப் பயணங்களுக்கான முதன்மை முனையத்தில் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட கண்காணிப்பின் போது, KLIA எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனமான AKPS அதனை முறியடித்தது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 92 பேரிடம் சோதனை நடத்தப்பட்டதில், முறையான பயணப் பத்திரம் எதுவும் இல்லாத அந்த 68 பேரும் சிக்கினர்.
அவர்கள் முறையே 16 பாகிஸ்தானிய ஆடவர்கள், 45 வங்காளதேச ஆடவர்கள், இந்தியாவைச் சேர்ந்த 6 ஆண்கள் மற்றும் 1 பெண் என AKPS கூறியது.
இவ்வாண்டு ஜனவரி முதல் நேற்று முன்தினம் வரை, 24 மணி நேரங்களில் இவ்வளவு பேருக்கு நுழைவு மறுக்கப்பட்டது இதுவே முதன் முறையாகும்.
சுற்றுப்பயணிகள் எனக் கூறிக் கொண்ட ‘அக்கும்பல்’ KLIA வந்திறங்கியதும் நேரடியாக குடிநுழைவுச் சோதனைச் சாவடிக்கு செல்லவில்லை.
மாறாக, குறிப்பிட்ட தரப்பு வந்து தங்களைக் கூட்டிச் செல்வதற்காக, வந்திறங்கும் வளாகத்திலும் உணவுக் கடைகளிலும் சுற்றிக் கொண்டிருந்தனர்.
இவ்வாண்டு இதுவரை 2,654 வெளிநாட்டவர்களிடம் சந்தேகத்தின் பேரில் AKPS சோதனை நடத்தியதில், 900 பேர் மேற்கண்ட யுக்தியில் மலேசியா வந்தது அம்பலமானது.
உண்மையான சுற்றுப்பயணிகள் அல்ல என்பது உறுதியானதால், அவர்களுக்கும் நாட்டில் நுழையத் தடை விதிக்கப்பட்டது.