சூழ்நிலைக்கு ஏற்றவாறே உரிமை, MAP கட்சிகளுடன் ஒத்துழைக்கிறோம்; முடிவைத் தற்காக்கிறார் பாஸ் உலாமா தலைவர்

சுங்கை பட்டாணி, செப்டம்பர்-14,
இதற்கு முன் பகைமைப் பாராட்டினாலும் பேராசிரியர் Dr பி. ராமசாமியின் உரிமைக் கட்சி மற்றும் பி. வேதமூர்த்தியின் MAP உள்ளிட்ட கட்சிகளுடன் இப்போது பாஸ் ஒத்துழைப்பு மேற்கொள்ள முனைவதை, பாஸ் உலாமாக்கள் மன்றத் தலைவர் அஹ்மாட் யாஹ்யா தற்காத்துள்ளார்.
இது நிரந்தர கூட்டணி அல்ல, மாறாக தற்போதைய பிரச்சனைகள் — குறிப்பாக வாழ்க்கைச் செலவின உயர்வு — குறித்து விவாதிக்க உருவாக்கப்பட்ட தளமே என அவர் சொன்னார்.
பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையில் 12 எதிர்க்கட்சிகள் கடந்த மாதம் அதிகாரப்பூர்வமற்றக் கூட்டணியை உருவாக்க ஒப்புக்கொண்டன.
இதில் பெர்சாத்து, பாஸ், கெராக்கான், MIPP, பெஜுவாங், புத்ரா, பெர்ஜாசா, உரிமை, MAP, Muda, PSM உள்ளிட்டவை அடங்கும்.
இந்த ஒத்துழைப்பால் பாஸ் அல்லது பெரிக்காத்தான் நேஷனலுக்கு பாதிப்பு இல்லை, எனவே பிரச்சனையும் இல்லையென அஹ்மாட் யாஹ்யா தெரிவித்தார்.
ஒரு காலத்தில் கொள்கை ரீதியாக மோதிய உரிமை மற்றும் MAP கட்சிகளுடன் ஒத்துழைப்பதா என அம்னோ உள்ளிட்ட தரப்புகள் முன்னதாக பாஸ் கட்சியை விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.