
செந்தூல் போலீஸ் தலைவராக ACP பஸ்ரி முறைப்படி பதவியேற்பு
கோலாலாம்பூர், பிப்ரவரி-16,
செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவராக ACP பஸ்ரி சகோனி (Basri Sagoni) பதவியேற்றுள்ளார்.
புக்கிட் அமானுக்கு பணிமாறிச் சென்றுள்ள ACP அஹ்மாட் சுகார்னோ மொஹமட் சஹாரிக்கு (Ahmad Sukarno Mohd Zahari) பதிலாக பஸ்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுநாள் வரை பஸ்ரி புக்கிட் அமானில் கவனித்து வந்த நிர்வாகப் பொறுப்பை சுகார்னோ ஏற்கிறார்.
இன்றைய பதவி ஒப்படைப்பு நிகழ்வு, கோலாலாம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் (Fadhil Marsus) தலைமையில் நடைபெற்றது.
இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக செந்தூல் போலீஸ் தலைவராக சேவையாற்றியதற்காக சுகார்னோவுக்கு ஃபாடில் நன்றித் தெரிவித்தார்.
இதனிடையே, சீனப் புத்தாண்டுக்கு நள்ளிரவுக்கு மேல் பட்டாசுகளையோ வாணவெடிகளையோ வெடிக்க வேண்டாம் என, ஃபாடில் மீண்டும் நினைவுறுத்தினார்.
பொது மக்களுக்கு அது தொந்தரவாக இருக்கும் எனக் கூறிய அவர், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
சீனப் புத்தாண்டுக்கு Pop Pop மற்றும் Happy Boom பட்டாசுகள் மற்றும் வாணவெடிகளை மட்டுமே விற்கவும், வெடிக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



