செராஸ், அக்டோபர் 2 – தமிழ் மொழியில் மாணவர்களின் திறமையை வளப்படுத்தும் வகையில், வெல்லும் குரல் 2024 எனும் நிகழ்ச்சி மிக விமரிசையாக செராஸ் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது.
கடந்த செப்டம்பர் 28ஆம் திகதி, செராஸ் தமிழ்ப்பள்ளியும், ஒளி விளக்கு அமைப்பும் இணைந்து, மூன்றாவது முறையாக இந்நிகழ்ச்சியை நடத்தியது.
இதில், 15 தமிழ்ப்பள்ளிகள், 8 தேசியப் பள்ளிகள் என மொத்தம் 23 பள்ளிகளைச் சேர்ந்த தமிழ்மொழி பயிலும் 250 மாணவர்கள், இந்நிகழ்ச்சியில் பங்குக் கொண்டனர்.
இம்மாணவர்களுக்கு மாறுவேடம் போட்டி, கதைக் கூறும் போட்டி, திருக்குறள் மனனப் போட்டி, எழுச்சிப் பாடல் போட்டி, கிராமிய நடனப் போட்டி, பேச்சுப் போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டிகளின் ஒவ்வொரு வெற்றியாளர்களுக்கும் ரொக்கப் பரிசுகளுடன், பதக்கம் மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், 6 போட்டிகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்று Edinburgh தோட்டத் தமிழ்ப்பள்ளி முதல் நிலையில் வென்று சுழற்கிண்ணத்தை தன் வசமாக்கியது.
அதனைத் தொடர்ந்து, இரண்டாம் நிலையில் சரஸ்வதி தமிழ்ப்பள்ளியும், மூன்றாம் நிலையில் செந்தூல் அரசினர் தமிழ்ப்பள்ளியும் இடம் பிடித்தது.
வெறும் 8 பள்ளிகளின் பங்களிப்பில் தொடங்கிய இப்போட்டி, இவ்வாண்டு 23 பள்ளிகள் என எண்ணிக்கையில் உயர்ந்து, இந்நிகழ்ச்சியின் தரத்தை உயர்வடையச் செய்துள்ளதாக, செராஸ் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் தேவி தெரிவித்தார்.
டாக்டர் வாஞ்சிதேவன், கல்வி அமைச்சரின் தேசியக் கல்வி ஆலோசனை மன்ற உறுப்பினர் சுப்ரமணியம் கண்ணன், தமிழ்ப்பிரிவுத் துணை இயக்குனர் ஜானகி, கணித அறிவியல் பாட உயர் அதிகாரி குமார், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து நிகழ்ச்சியை மெருகூட்டியுள்ளனர்.