ஸ்ரீ கெம்பாங்கான், டிசம்பர்-5 – நெக்லஸ் சங்கிலித் திருட்டு தொடர்பில் சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா, Jalan Semangat PJS 13-ல் உள்ள சாலை சமிக்ஞை விளக்குச் சந்திப்பில், நேற்று 4 பெண்கள் கைதாகினர்.
30 முதல் 41 வயதிலான அந்நால்வரும் நவம்பர் 28-ஆம் தேதி காலை ஸ்ரீ கெம்பாங்கானில் 69 வயது மூதாட்டியின் கழுத்திலிருந்து சங்கிலியைப் பறித்துச் சென்றவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது.
அக்கும்பல் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் AA அன்பழகன் கூறினார்.
சம்பவத்தன்று காலை அம்மூதாட்டி தனது வீட்டுக்கு வெளியே இருந்த போது, போலிப் பதிவு எண் பட்டையுடன் கார் ஒன்று வந்து நின்றது.
அதிலிருந்திறங்கிய அடையாளம் தெரியாத 3 பெண்கள், கடன் மற்றும் நிதியுதவி குறித்து மூதாட்டியிடம் பேச்சுகொடுத்தனர்.
பின்னர் அவரை காரில் ஏற்றிக்கொண்டு செர்டாங் பெர்டானா, சௌவுத் சிட்டி பிளாசாவில் உள்ள தங்களது ‘அலுவலகத்துக்கு’ அழைத்துச் சென்றனர்.
அங்கே காரிலிருந்து இறங்கும் போது மூதாட்டியின் கழுத்திலிருந்து சங்கிலியைப் பறித்துகொண்டு அக்கும்பல் தப்பியோடியது.
அத்திருட்டு கும்பல் கைதான 1 நிமிட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.