
கோலாலம்பூர், பிப் 5 – நாட்டில் சொற்பொழிவு ஆற்றுவதற்கு இதற்கு முன் சர்ச்சைக்குரிய முஸ்லீம் சமய போதகர் ஷக்கிர் நய்க்கிற்கு (Zakir Naik) விதிக்கப்பட்ட தடை இன்னமும் அமலில் இருக்கிறதா என அரசாங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான R.S.N ராயர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் பெர்லீசில் (Perlis) ஷக்கிர் நாய்க் சொற்பொழிவு ஆற்றியதாக செய்திகள் வெளியாகியதால் இது குறித்து தாம் கேள்வி எழுப்புவதாக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான ராயர் தெரிவித்தார்.
ஷக்கிர் நய்க் சொற்பொழிவு ஆற்றுவதற்கான தடை இன்னும் அமலில் இருக்கிறதா என போலீசிற்கு குறிப்பாக போலீஸ் படைத் தலைவரை நான் கேட்க விரும்புகிறேன்.
அவர் சொற்பொழிவு ஆற்றிய தகவல் உண்மையானால் சொற்பொழிவு ஆற்றக்கூடாது என விதிக்கப்பட்ட தடையை ஷக்கிர் நய்க் ஏன் பின்பற்றவில்லை என இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ராயர் வினவினார்.
எனவே ஷக்கிர் நய்க்கிற்கு எதிராக போலீஸ் விசாரணை நடத்தி அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை கொண்டுவருமா என்றும் ராயர் கேட்டுள்ளார்.
பிப்ரவரி 2ஆம் தேதி கங்காரில் (Kangar) நடைபெற்ற நிகழ்ச்சியில் ஷக்கிர் நய்க் சொற்பொழிவு ஆற்றியதாக The Scoop தகவல் வெளியிட்டது.
நாடு தழுவிய நிலையில் பொதுவில் ஷக்கிர் நய்க் சொற்பொழுழிவு ஆற்றுவதற்கு தடை விதிக்கும் உத்தரவு அனைத்து மாநில போலீஸ் தலைமையகத்திற்கும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு 3 ஆம்தேதி கோத்தா பாருவில் ( Kota Bharu) ஆற்றிய சொற்பொழிவில் மலேசியாவிலுள்ள இந்து மற்றும் சீன சமூகங்களைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதை தொடர்ந்து அவருக்கு எதிராக இந்த தடை விதிக்கப்பட்டது.
மலாக்கா, ஜோகூர், சிலாங்கூர் , பினாங்கு, கெடா, பெர்லீஸ் மற்றும் சரவா ஆகியவை உட்பட ஏழு மாநிலங்கள் ஷக்கிர் நாய்க் சொற்பொழிவுக்கு இதற்கு முன் தடை விதித்திருந்தன.