
கோலாலம்பூர், பிப்ரவரி-19 – கோலாலம்பூர், ச்சௌ கிட், ஜாலான் ஹஜி ஹுசேய்ன் சாலையில் மேற்கொள்ளப்பட்ட Ops Kutip சோதனை நடவடிக்கையில் 124 கள்ளக் குடியேறிகள் கைதாகினர்.
வெளிநாட்டவர்களின் முகாமாக இருக்கும் அங்குள்ள 14 மாடி பழைய அடுக்குமாடி குடியிருப்பில் அச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்பகுதியில் கள்ளக்குடியேறிகளின் நடமாட்டம் குறித்து பொது மக்கள் கொடுத்த புகாரை அடுத்து, அச்சோதனை நடத்தப்பட்டதாக, கோலாலம்பூர் குடிநுழைவுத் துறையின் இயக்குநர் Wan Mohammed Saupee கூறினார்.
அதிகாரிகள் வருவதை கண்டதும் பலர் தப்பியோட முயன்றனர்; சிலர் கூரையில் ஒளிந்துக் கொண்டனர்.
என்றாலும், எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மொத்தமாக 250 பேர் பரிசோதிக்கப்பட்ட நிலையில், முறையான பயணப் பத்திரங்கள் இல்லாத 124 பேர் கைதாகினர்.
அவர்களில் 84 பேர் இந்தோனீசியர்கள், 17 பேர் வங்காளதேசிகள், எஞ்சியவர்கள் மியன்மார், நேப்பாளம் பாகிஸ்தான் மற்றும் இந்தியப் பிரஜைகள் ஆவர்.
அந்த பழைய அடுக்குமாடிக் குடியிருப்பு, பார்ப்பதற்கே அலங்கோலமாகவும், அசுத்தமாகவும், ஒரே குப்பைக் கூளமாகவும் காட்சியளிக்கிறது; இதனால் சுற்றுப்புற மக்களுக்குத் தான் சுகாதார கேடு என அச்சம் நிலவுகிறது.
மாற்றியமைக்கப்பட்ட ஒரு வீட்டில் 23 பேர் நெரிசலில் வசித்து வருகின்றனர்; 800 முதல் 2,200 ரிங்கிட் வரையிலான வீட்டு வாடகையை தங்களுக்குள் அவர்கள் பகிர்ந்துக்கொள்வதும் தெரிய வந்தது.