கோலாலம்பூர், அக்டோபர்-2 – கோலாலம்பூரின் பரபரப்பான ஜாலான் சுல்தான் சாலை சந்திப்பில் சட்டவிரோதமாக SUV வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டதால், சுற்றுப் பயணிகள் அதிகம் கூடும் அவ்விடத்தில் அண்மையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அந்த வெள்ளை நிற SUV காரின் பாதி முன்பகுதி, சாலையின் மஞ்சள் கட்டத்தில் நிறுத்தப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதை, இணையத்தில் வைரலான வீடியோவில் காண முடிந்தது.
இதனால் மற்ற வாகனங்கள் குறிப்பாக Rapikd KL பேருந்து, அந்த SUV வாகனத்தை இடிக்காமல் நகருவதற்கு சிரமப்பட்டது.
மஞ்சள் கட்டம் என்பது, சாலைச் சந்திப்புகளில் போக்குவரத்தை சீராக்குவதற்காக போடப்படும் அடையாளமாகும்; அங்கு போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக் கூடாது.
நல்லவேளையாக, அச்சூழ்நிலையைச் சமாளிக்கும் ஆற்றல் பெற்றிருந்த பேருந்து ஓட்டுநர், பொது மக்கள் உதவியுடன் SUV காருக்கு சேதாரம் ஏற்படாமல் பேருந்தை விடுவித்து பயணத்தைத் தொடர்ந்தார்.
கடும் போராட்டத்திற்குப் பிறகு பேருந்து அங்கிருந்து புறப்படுகையில், கூடியிருந்தவர்கள் மத்தியில் பலத்த கைத்தட்டல்களும் ஆரவாரங்களும் எழுந்தன.
அங்கு ஒரு பிரளயமே போய்க் கொண்டிருந்த போதும், கடைசி வரை அந்த SUV காரின் உரிமையாளரை அங்கு காணவில்லை என்பது தான் ஆச்சரியம்.
அது அவரின் சுயநலத்தைக் காட்டுவதாக இருந்தாலும், அச்சம்பவத்தால் பேருந்து ஓட்டுநருக்கு உதவ பொது மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டது மனதுக்கு ஆறுதலைத் தருகிறது.