கோலாலம்பூர், அக் 17 – ஜாலான் புடுவில் உள்ள உணவகங்கள், உணவகத் தொகுதியும் மற்றும் ஜாலான் லோக் இயூவும் நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் பரபரப்பான புதிய விபாச்சார மையமாக உருவெடுத்துள்ளன. அந்த இடங்களை விபச்சார சேவை மையாக விளப்பரப்படுத்துவதற்கான, வியூக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர்துறை அமைச்சர் டாக்டர் ஷலேஹா முஸ்தபா ( Zaliha Mustafa ) இன்று நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தினார். வாடிக்கையாளர்களுக்காக நடத்தப்பட்டு வந்த வழக்கமான விபச்சார விடுதிகள் தற்போது டிஜிட்டல் மையமாக மாறியிருப்பதால் புதிய விபச்சார மையங்களை துடைத்தொழிப்பது கோலாலம்பூர் போலீசாருக்கு பெரும் சவாலாக இருப்பதாக அவர் கூறினார்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஹோட்டல்கள் , சிறிய தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளிலும் விபச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே இந்த நடவடிக்கைகள் குறித்து தெரியவந்தால் இது குறித்து பொதுமக்கள் விபச்சார துடைத்தொழிக்கும் தரப்பினருக்கு தெரிவிக்க வேண்டும் என அரசாங்கம் கேட்டுக்கொள்வதாக ஷலேஹா கூறினார். வங்சா மாஜூ பக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஹிர் ஹசான் ( Zahir Hasan ) மற்றும் கூலிம் பண்டார் பாரு பெரிக்காத்தான் நேசனல் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸ்லான் ஹசிம் ( Roslan Hashim ) ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது ஷலேஹா இத்தகவலை வெளியிட்டார்.