கோலாலம்பூர், செப்டம்பர்-10 – ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நிலம் உள்வாங்கிய சம்பவம் குறித்த தகவல்களை அங்குள்ள வியாபாரிகளின் பிரதிநிதிகளுடன் அடிக்கடி பகிர்ந்துக் கொள்ள கோலாலம்பூர் மாநகர மன்றம் DBKL முன் வந்துள்ளது.
DBKL, அரசு நிறுவனங்கள், மஸ்ஜித் இந்தியா வர்த்தகப் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையில் செப்டம்பர் 5-ல் நடைபெற்ற 2 கலந்தாய்வுகளின் போது அந்த உத்தரவாதம் வழங்கப்பட்டது.
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவின் ஒரு பகுதி சாலை அதாவது Wisma Yakin-னிலிருந்து ஜாலான் மஸ்ஜித் இந்தியா போலீஸ் குடில் வரை, சுமார் 160 மீட்டர் தூரத்திற்கு மூடப்பட்டுள்ள தகவலும் அச்சந்திப்புகளின் போது தெரிவிக்கப்பட்டது.
கட்டமைப்பு வசதிகளின் பரிசோதனை மற்றும் நில அமைப்பு ஆய்வுப் பணிகளுக்கு வழிவிடுவதற்காக, அச்சாலை மூடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதியைச் சுற்றிலும் hoarding சுவர் பலகை அமைக்கும் பணி நேற்று முழுமைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
சம்பவ இடத்தில் பாதாள சாக்கடையின் பழுதுப் பார்ப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பழுதுப் பார்ப்புப் பணிகள் நடைபெறும் காலம் நெடுகிலும் Jalan TAR இரவுச் சந்தை வியாபரிகளை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டமும் முன்வைக்கப்பட்டது.
இவ்வேளையில் மஸ்ஜித் இந்தியா மசூதியினுள் தொழுகையிடம் நெருக்கமாக இருப்பதால், வெள்ளிக் கிழமை தொழுகைக்கு மசூதிக்கு வெளியே கூடுதல் இடத்தை ஒதுக்கித் தருமாறு விண்ணப்பம் முன் வைக்கப்பட்டுள்ளது.
மஸ்ஜித் இந்தியாவில் பழைபடி மக்கள் கூட்டம் நிரம்பி வழிய ஏதுவாக, தொடர் அறிவிப்பு பிரச்சாரங்களை செய்து வருமாறும் வியாபாரிகள் சார்பில் DBKL கேட்டுக் கொள்ளப்பட்டது.