
குளுவாங், மார்ச் 5 – ஜொகூர் , குளுவாங்கில் வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையில் 61.9 ஆவது கிலோமீட்டரில் இன்று விடியற்காலையில் 20 பயணிகளுடன் கோலாலம்பூருக்கு சென்று கொண்டிருந்த விரைவு பஸ் ஒன்று , டிரெய்லர் லோரியின் பின்புறம் மோதியதில் 12 பேர் காயம் அடைந்தனர்.
21 மற்றும் 73 வயதுக்குட்பட்ட பஸ் பயணிகளில் 11 பேர் சொற்ப காயம் அடைந்த வேளையில் 44 வயது பஸ் ஓட்டுநர் கால் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் அடைந்தார்.
எனினும் 51 வயதுடைய லோரி ஓட்டுநரும் 43 வயதுடைய துணை பஸ் ஓட்டுநரும் காயம் அடையவில்லை.
அந்த பஸ் ஓட்டுநர் விடியற்காலை மணி 6.30 அளவில் லோரியை முந்திச் செல்ல முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக குளுவாங் மாவட்ட போலீஸ் துணைத் தவைர் Superintendent நிக் முகமட் அஸ்மி உசேய்ன் ( Nik Mohd Azmi Husin) தெரிவித்தார்.
இதனால் பஸ்ஸின் முன்புறப் பகுதி சேதம் அடைந்தது. காயம் அடைந்தவர்களில் மூவர் பத்து பஹாட்டிலுள்ள சுல்தானா நோரா இஸ்மாயில் ( Sultanah Nora Ismail ) மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட வேளையில் எஞ்சியோர் குளுவாங்கிலுள்ள Enche’ Besar Hajjah Khalsom மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.
இரண்டு வாகன ஒட்டுநர்களும் செல்லத்தக்க உரிமம் வைத்திருந்தபோதிலும் போதைப் பொருள் அல்லது மது பானம் பயன்படுத்தியுள்ளாரா என்பதை கண்டறிவதற்காக பஸ் ஓட்டுநரின் இரத்த மாதிரி பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது.