
ஜோகூர் பாரு, செப்டம்பர்-28,
ஜொகூர் பாருவில், கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர், பணம் அடங்கிய பையைத் தூக்கிச் சென்றதில், 34 வயது ஆடவர் 100,000 ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் தாமான் பெர்லிங் பகுதியில் நிகழ்ந்ததாக, வட ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் பல்வீர் சிங் மஹிந்தர் சிங் கூறினார்.
பாதிக்கப்பட்டவர், அப்பணத்தை ஜோகூர் ஜெயாவில் உள்ள வங்கியிலிருந்து எடுத்து வந்து காரினுள் வைத்து விட்டுச் சென்றுள்ளார்.
மதியம் திரும்பிய போது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டதை அறிந்து அவர் போலீஸில் புகார் செய்தார்.
சம்பவ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அதில், சுவாசச் கவசம் அணிந்த ஒரு கும்பல் அக்காரை சூழ்ந்து நிற்பதும், அவர்களில் ஒருவன் காரின் கண்ணாடியை அடித்து உடைத்து, உள்ளேயிருந்த பையைத் தூக்கிக் கொண்டு ஓடுவதும் தெளிவாகத் தெரிகிறது.
போலீஸார் தற்போது சந்தேக நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.