
ஜோகூர் பாரு, ஜூலை 18 – கடந்த திங்கட்கிழமை, தொடங்கப்பட்ட யானைகள் இடமாற்ற நடவடிக்கையின் மூலம் குளுவாங் கஹாங் கம்போங் பிங்கிரில் ஆறு யானைகளை வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையினர் (PERHILITAN) வெற்றிகரமாகப் பிடித்துள்ளனர்.
பிடிக்கப்பட்ட யானைகள் யாவும் மிகப் பெரியவை என்றும் ஒவ்வொன்றும் இரண்டு மீட்டர் உயரத்தை கொண்டிருந்தன என்றும் அறியப்படுகின்றது.
அதிக ஆபத்துள்ள இடங்களில் யானை தாக்குதல்களைக் குறைப்பதும், விவசாயப் பகுதிகள், கிராமங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளைத் தொந்தரவு செய்யும் யானைக் குழுக்களைக் கண்டறிந்து இடமாற்றம் செய்வதும் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், அசல் வாழ்விடத்திற்கு வெளியே மக்கள்தொகை கட்டுப்பாடு மற்றும் காட்டு யானை மேலாண்மை கொள்கைகளை மேம்படுத்த அறிவியல் தரவுகளை சேகரிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுப்பதை இது நோக்கமாகவும் கொண்டுள்ளது.
இந்நிலையில், இடமாற்ற நடவடிக்கையை செயல்படுத்துவதற்கு ஜோகூர் அரசாங்கம் 600,000 ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.